தமிழகத்துக்கு தினமும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி வழங்க வேண்டும்: மத்திய அரசிடம் தமிழகம் கோரிக்கை

மின்னுற்பத்தி மேற்கொள்வதற்கு தமிழ்நாடு மின்னுற்பத்தி, பகிர்மானக் கழகத்துக்கு தினமும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது. 
தில்லியில் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலை வியாழக்கிழமை சந்தித்த தமிழக மின்துறை அமைச்சர் பி. தங்கமணி.
தில்லியில் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலை வியாழக்கிழமை சந்தித்த தமிழக மின்துறை அமைச்சர் பி. தங்கமணி.

மின்னுற்பத்தி மேற்கொள்வதற்கு தமிழ்நாடு மின்னுற்பத்தி, பகிர்மானக் கழகத்துக்கு தினமும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது. 
இது தொடர்பாக தில்லியில் மத்திய ரயில்வே, நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் ஆர். கே. சிங் ஆகியோரை தமிழக மின்சாரம், மதுவிலக்கு, ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி வியாழக்கிழமை சந்தித்தார். இச்சந்திப்பின்போது, தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரும் முதன்மைச் செயலருமான எம். சாய்குமார் உடனிருந்தார். 
இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கமணி கூறியதாவது:
தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்குச் சொந்தமான அனல் மின் நிலையங்களில் மின்னுற்பத்தி மேற்கொள்ள தினமும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. தற்போது 50-60 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி மட்டுமே கிடைத்து வருகிறது. வட மாநிலங்களில் அதிக மழை பெய்வதால் தமிழகத்துக்கு நாள்தோறும் கிடைக்க வேண்டிய நிலக்கரியின் அளவு குறைந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, நிலக்கரியை ரயில் மூலம் ஏற்றிச் செல்வதற்கு தினமும் 20 சரக்குப் பெட்டிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ரயில்வே, நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை பரிசீலிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதே போல, 'தமிழகத்தில் உள்ள செய்யூர் அனல் மின் நிலையத் திட்டப் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்றும், கூடங்குளம் 3, 4-ஆவது அணுஉலையில் உற்பத்தி செய்யப்படும் 2,000 மெகாவாட் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் மீண்டும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்வதற்கு ஏதுவாக பிரத்யேக பசுமை வழித்தடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் கொண்டு வருவதற்கு ஏதுவாக 'பவர் கீரிட்' மூலம் 765 கிலோவாட் மின் தொடர் கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் புயல் மற்றும் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் போது தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கு ஏதுவாக மின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு மத்திய அரசு ரூ.17 ஆயிரம் கோடி மானியம் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது. இதில் ரூ.3 ஆயிரம் கோடி ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியை விரைந்து அளிக்க வேண்டும் என இணையமைச்சர் ஆர். கே. சிங்கிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன் என்றார் அமைச்சர் பி. தங்கமணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com