நிதி நிறுவன மோசடி: இருவருக்கு 72 ஆண்டு சிறைத் தண்டனை

கடலூரில் நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட இருவருக்கு 72 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

கடலூரில் நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட இருவருக்கு 72 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
கடலூர் வீரபத்திரசாமி கோயில் தெருவில் செயல்பட்டு வந்தது டி.ஆர். அண்ட் என் என்ற நிதி நிறுவனம். இதில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 24 சதவீதம் வட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை நம்பி, அப்பகுதியைச் சேர்ந்த 24 பேர், ரூ. 66 லட்சத்து 97 ஆயிரத்து 500 ஐ முதலீடு செய்தனர். ஆனால் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் நிதி நிறுவனம் ஏமாற்றி விட்டது. 
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் கடலூர் வணிக குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸார், நிதி நிறுவனம் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் சேகர் என்ற ஞானசேகர் , செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். சென்னையில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது. 
வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமலதா, நிதி நிறுவனத்தை நம்பி பணம் செலுத்தியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வட்டியுடன் பணம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் பணத்தைச் செலுத்தி உள்ளனர். ஆனால், பணம் செலுத்தியவர்களுக்கு ஒரு பைசா கூட திரும்ப வழங்கப்படவில்லை. எனவே ஞானசேகர், செல்வம் ஆகியோர் மீது 24 பேர் புகார் அளித்துள்ளதால் ஒவ்வொருவரின் புகாருக்கும் 3 ஆண்டுகள் வீதம் மொத்தம் 72 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும். அதாவது 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும், நிதி நிறுவன உரிமையாளர்கள் ஞானசேகர், செல்வம் ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்தும், அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட 24 பேருக்கு பிரித்து வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com