27 மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை சராசரி அளவே பெய்யும்: வேளாண்மைப் பல்கலை. தகவல்

தமிழ்நாட்டில் 2017-ஆம் ஆண்டுக்கான வடகிழக்குப் பருவ மழை சராசரி அளவிலேயே பெய்யும் என்று வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி

தமிழ்நாட்டில் 2017-ஆம் ஆண்டுக்கான வடகிழக்குப் பருவ மழை சராசரி அளவிலேயே பெய்யும் என்று வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டின் வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கான (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கான தகவல்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையங்களிலிருந்து பெறப்பட்டன. தகவல்கள் கிடைக்க இயலாத இடங்களுக்கு, ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன் கணினி கட்டமைப்பில் உள்ள தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சேகரிக்கப்பட்ட மழையைப் பற்றிய புள்ளி விவரங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 2017ஆம் ஆண்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 60 சதவீத வாய்ப்பாக எதிர்பார்க்கப்படும் மழையளவு விவரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் தமிழ்நாட்டுக்கு 84 சதவீத மாவட்டங்களில் சராசரி மழையளவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் சராசரி மழை அளவு எதிர்பார்க்கப்படும் 27 மாவட்டங்களாவன:
சென்னை, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், அரியலூர், கரூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, நீலகிரி, கன்னியாகுமரி.
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் சராசரி மழை அளவை விடக் குறைவான மழை எதிர்பார்க்கப்படும் 5 மாவட்டங்கள்:
காஞ்சிபுரம் (20 சதவீதம் குறையும்), விழுப்புரம் (21 சதவீதம் குறையும்), பெரம்பலூர் (24 சதவீதம்), தூத்துக்குடி (25 சதவீதம்), விருதுநகர் (22 சதவீதம்).
சராசரி மழை அளவு எதிர்பார்க்கப்படும் இடங்களில் வானிலை சார்ந்த வேளாண் அறிவுரைகளுடன் பயிர் சாகுபடி மேற்கொள்ளலாம். சராசரியைக் காட்டிலும் குறைவான மழை எதிர்பார்க்கப்படும் இடங்களில் பாசன நீர் அளவைப் பொருத்து பயிர் சாகுபடி செய்யலாம். மேலும் பெறப்படும் மழையை தகுந்த நீர் சேகரிப்பு மேலாண்மையைக் கையாண்டு பயன் பெறலாம் என்று பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com