அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்

ஓபிஎஸ் - இபிஎஸ் அணி சார்பில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டன
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்

ஓபிஎஸ் - இபிஎஸ் அணி சார்பில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டன. மேலும், இரு அணிகளும் இணைந்தது தொடர்பான கடிதமும் தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டது.
அதிமுக இரட்டை இலைச் சின்ன விவகாரம் தொடர்பாக ஆவணங்களைத் தாக்கல் செய்ய செப்டம்பர் 29-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்திருந்தது. இந்நிலையில், அதிமுகவின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டுள்ளன.
அதிமுகவில், ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலும், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலும் தனித் தனியே செயல்பட்டு வந்த இரு அணிகளும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி முறைப்படி ஒன்றாக இணைந்தன. இதை அதிமுக அம்மா அணியின் மூத்த நிர்வாகியும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமியும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் நிர்வாகியும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக அறிவித்தனர்.
இந்தப் புதிய ஏற்பாட்டின்படி, தமிழக முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி தொடர்ந்து நீடிப்பார். துணை முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் செயல்படுவார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி கே. பழனிசாமி அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் செப்டம்பர் 12 -ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில், நிர்வாகப் பொறுப்புகளை ஏற்கும் ஒருங்கிணைப்பாளர் (ஓ.பன்னீர்செல்வம்), இணை ஒருங்கிணைப்பாளர் (எடப்பாடி கே.பழனிசாமி) ஆகியோருக்கு நிர்வாக அதிகாரங்களை அளிப்பது; ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களும், தேர்தல்கள் வழியாக தேர்வு செய்யப்பட்டோரும் அவரவர் பொறுப்புகளில் தொடர்ந்து செயல்படுவது; அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி ரத்து; தாற்காலிகப் பொதுச் செயலாளர் பதவியும், அவர் அறிவித்த நியமனங்களும் ரத்து என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், இரு அணிகளும் இணைந்தது தொடர்பான விவரங்கள்ஆகியவை குறித்த ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் சார்பில் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது. இவற்றை தேர்தல் ஆணையத்தின் உயரதிகாரிகளிடம் அவர்கள் அளித்தனர்.
இது குறித்து கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியது: ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, சில அரசியல் சூழல் காரணமாக அதிமுக இரு அணிகளாகப் பிரிந்தன. ஜெயலலிதாவின் புகழை பாதுகாக்கும் வகையில், ஒன்றரை கோடி தொண்டர்களின் உணர்வுகளை மதித்து, நல்ல முறையில் ஆட்சி செய்யும் நோக்கத்தில் இரு அணிகளின் தலைவர்களும் ஒன்றுகூடி முடிவெடுத்து இணைந்துள்ளனர்.
இரு அணிகளும் இணைந்தது தொடர்பான கடிதத்தை தேர்தல் ஆணையத்தில் அளித்தோம். அதுமட்டுமல்லாமல், இணைப்புக்குப் பிறகு கூடிய பொதுக்குழுவில், கழகத்தின் தொண்டர்கள் கூறி வந்ததற்கு ஏற்ப கட்சியின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்ற பதவி ஜெயலலிதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மேலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பொதுச் செயலாளருக்கு இணையான அதிகாரம் கொண்ட பொறுப்பு புதிதாக ஏற்படுத்தப்பட்டது. இது தவிர இரு துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் உருவாக்கப்பட்டு அதற்கு பொதுக்குழுவில் அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு பொதுக்குழுவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் புதிய விதிமுறைகளின் நகலையும் தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளோம். இரு அணிகளும் இணைந்ததை முறைப்படி தெரிவிக்கும் வகையில், பொதுச் செயலாளருக்குப் பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஏற்படுத்தப்பட்டதற்கு பொதுக்குழுவில் பெறப்பட்ட அங்கீகாரத்தின் நகலையும் தேர்தல் ஆணையத்தில் அளித்தோம். தேவைப்பட்டால் புதிய நிர்வாகிகளின் பட்டியலை மீண்டும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்வோம் என்றார் அவர்.
பேட்டியின் போது மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் வி. மைத்ரேயன், தமிழக மீன்வளம், பணியாளர், நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், தமிழக சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், எம்எல்ஏக்கள் இன்பதுரை, ரவி ஆகியோர் உடனிருந்தனர்.
விசாரணை தேதி மாற்றம்
அதிமுக இரட்டை இலைச் சின்னம் விவகாரம் தொடர்பாக இறுதி விசாரணை அக்டோபர் 6-ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. முன்னதாக, இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் இறுதி விசாரணை அக்டோபர் 5-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com