அவிநாசி அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதல்: அதிமுக பிரமுகர்கள் உள்பட 6 பேர் சாவு

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தெக்கலூர் புறவழிச் சாலையில் கார் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கிய கார். (வலது) கார் மீது மோதியதில் சேதமடைந்த அரசுப் பேருந்து.
மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கிய கார். (வலது) கார் மீது மோதியதில் சேதமடைந்த அரசுப் பேருந்து.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தெக்கலூர் புறவழிச் சாலையில் கார் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, வெப்படை பகுதியைச் சேர்ந்தவர் நல்லண்ணன் மகன் கந்தசாமி (64). டி.சி.எம்.எஸ். கூட்டுறவு சங்கத் தலைவராகவும், பள்ளிபாளையம் அதிமுக ஒன்றியச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். எடப்பாடி, பள்ளிப்பட்டிசெங்கோடன் மகன் ஜேம்ஸ் ராமு (45). இவர், டி.சி.எம்.எஸ். கூட்டுறவு சங்க துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தார். எடப்பாடி, கொங்கணாபுரம் கந்தசாமி மகன் கதிர்வேல் (50). இவர், கூட்டுறவு சங்க இயக்குநராகப் பொறுப்பு வகித்து வந்தார். எடப்பாடி, கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் ரத்தினம் (55). இவர், கச்சிப்பள்ளி கூட்டுறவு சங்கச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். ஈரோடு, பெரியகாட்டுத் தோட்டம் ராமசாமி மகன் நல்லசாமி (69). எடப்பாடி கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன் மகன் முத்துசாமி (50). இவர், கச்சிப்பள்ளி அதிமுக கிளைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். எடப்பாடி, குமரன் நகர் பழனிசாமி மகன் பாலமுருகன் (54). கார் ஓட்டுநர். 
இவர்கள் 7 பேரும் தில்லியில் நடைபெறும் கூட்டுறவு சங்க வளர்ச்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகத் திருச்செங்கோட்டில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். 
அவர்களது கார் அவிநாசி, தெக்கலூர் பேருந்து நிறுத்தம் புறவழிச்சாலை வளைவு அருகே வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் வந்தபோது ஈரோட்டில் இருந்து கோவை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து காரின் பின்பக்கம் மோதியது. 
இதில், கட்டுப்பாட்டை இழந்த கார், புறவழிச்சாலை மேம்பாலத்தின் நடுவில் உள்ள இடைவெளி வழியாக, 25 அடி ஆழத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில், காரில் பயணம் செய்த கந்தசாமி, ஜேம்ஸ்ராமு, கதிர்வேல், ரத்தினம், நல்லசாமி, முத்துசாமி ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
பலத்த காயமடைந்த கார் ஓட்டுநர் பாலமுருகன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவிநாசி காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விபத்துக்குள்ளான கார், அரசுப் பேருந்தை அப்புறப்படுத்தினர். 
உயிரிழந்தவர்களின் உடல்கள் அவிநாசி, கோவை அரசு மருத்துவமனைகளில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 
இதுகுறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
புறவழிச்சாலையின் மேம்பால வளைவு மற்றும் இடைவெளிப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதால், அங்கு உரிய எச்சரிக்கைப் பலகைகள், தடுப்புகள் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com