இரட்டை இருப்பிடச் சான்று பெற்று தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர இடைக்கால தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

இரட்டை இருப்பிடச் சான்று வழங்கி தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேரலாம் என்ற அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இரட்டை இருப்பிடச் சான்று வழங்கி தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேரலாம் என்ற அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மத்திய தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அவர் தாக்கல் செய்த மனு: மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது. இந்தத் தேர்வின் அடிப்படையில் நடப்பாண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதனால் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் இரட்டை இருப்பிடச் சான்றிதழ் வழங்கி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
இதனால் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் இரட்டை இருப்பிடச் சான்றிதழ் வழங்கி தமிழகத்தில் சேர்ந்துள்ளார். அவர் நீட் தேர்வில் 514 மதிப்பெண் பெற்று தமிழக அளவில் 160 ஆவது இடத்தையும், கேரள தகுதிப்பட்டியலில் 3 ஆயிரத்து 129 ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.
கேரளத்தில் இந்த மாணவியால் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலையில் இரட்டை இருப்பிடச் சான்றிதழ் வழங்கி தமிழகத்தில் சேர்ந்துள்ளார். இரட்டை இருப்பிடச் சான்றிதழை சரிபார்க்க சரியான முறை இல்லை. இதனால் இரட்டை இருப்பிடச் சான்றிதழ் வழங்கி தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தவர்களை கைது செய்யவும், இதுதொடர்பான அரசாணையை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இரட்டை இருப்பிடச் சான்று வழங்கி மருத்துவக் கல்லூரிகளில் சேரலாம் என்று குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறை வெளியிட்ட அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com