எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பள்ளி மாணவர்கள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா போன்ற கல்வி சாராத நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவ, மாணவிகளை பங்கேற்க வைப்பதை தடை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா போன்ற கல்வி சாராத நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவ, மாணவிகளை பங்கேற்க வைப்பதை தடை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீ திமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக வழக்குரைஞர் ஏ.பி.சூர்யபிரகாசம், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
தமிழக அரசு சமீபகாலமாக கல்வி சாராத அரசியல் பொது நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவ, மாணவிகளைக் கட்டாயப்படுத்தி பங்கேற்க வைத்து வருகிறது. மாலையில் நடக்கும் நிகழ்ச்சிக்கு காலை முதலே அரங்கத்தில் காத்திருக்க வைக்கின்றனர். மாணவ, மாணவியருக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகூட முறையாக செய்து கொடுப்பதில்லை. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக மாணவ, மாணவியரை அழைத்துச் செல்பவர்கள் பெற்றோரிடம் முறையான அனுமதி பெறுவதில்லை. சில இடங்களில் மாணவர்களை அழைத்துச் சென்ற வாகனங்கள் விபத்துக்குள்ளாகி மாணவர்களும் காயமடைந்துள்ளனர். இதனால், மாணவ, மாணவியர் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பெற்றோர் தங்களது குழந்தைகளை கல்வி கற்கவே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுப்பி வைப்பதில்லை. எனவே, மாணவர்களின் பாதுகாப்பு கருதி இதுபோன்ற கல்வி சாராத அரசியல் பொது நிகழ்ச்சிகளில் பள்ளி நேரங்களின்போது அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளை கட்டாயப்படுத்தி கலந்து கொள்ள வைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி என்.கிருபாகரன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, 'ஆசிரியர்கள் சங்கப் போராட்டத்தின்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிக்கு வந்த மாணவர்களை வகுப்பு மற்றும் பள்ளியை விட்டு ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றி உள்ளனர். இது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. ஆசிரியர்களின் இதுபோன்ற நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. இந்தச் செயலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கருத்து தெரிவித்தார். 
அரசியல் பொது நிகழ்வுகளுக்கு அரசுப் பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி பங்கேற்க வைப்பதற்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு அக்டோபர் 6 -ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com