தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் தமிழகத்துக்குள் வருவது எப்படி?: உயர் நீதிமன்றம் கேள்வி

தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தமிழகத்துக்குள் எப்படி கொண்டு வரப்படுகின்றன என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து தமிழக அரசு பதிலளிக்கவும் நீதிமன்றம்
தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் தமிழகத்துக்குள் வருவது எப்படி?: உயர் நீதிமன்றம் கேள்வி

தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தமிழகத்துக்குள் எப்படி கொண்டு வரப்படுகின்றன என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து தமிழக அரசு பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் சரத், கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'தங்கள் நிறுவனத்தின் அருகே உள்ள பெட்டிக்கடை முன்பு பலர் பொதுஇடத்தில் நின்று புகை பிடித்து வருகின்றனர். இதனால் நிறுவனத்தின் ஊழியர்களும், பொதுமக்களும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். பொது இடத்தில் புகை பிடிக்கத் தடை விதித்து ஏற்கெனவே உள்ள சட்டத்தை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.
நீதிபதி கேள்வி: இந்த வழக்கு, நீதிபதி என். கிருபாகரன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தடை செய்யப்பட்ட கஞ்சா, புகையிலை, குட்கா போன்ற போதைப் பொருள்கள் தமிழகத்துக்குள் எப்படி வருகின்றன, அவை தமிழகத்தில் சட்டவிரோதமாக தயாரிக்கப்படுகின்றனவா அல்லது வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றனவா, பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் கடந்த 2016 ஜூன் மாதத்துக்குப் பிறகு, போதைப் பொருள்கள் விற்பனை குறித்து எத்தனை முறை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தால் அவற்றின் அளவு எவ்வளவு, கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்றதாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், இவர்களில் எத்தனை பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன, மாணவர்களிடம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கம் இருக்கிறதா என்பதைக் கண்டறிய உரிய சோதனைகள் நடத்தப்பட்டனவா, பொது இடங்களில் புகைப்பிடித்தவர்களில் எத்தனை பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என நீதிபதி கிருபாகரன் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.
இந்தக் கேள்விகளுக்கு தமிழக அரசு உரிய பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com