மயிலாடுதுறையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீராடல்

மயிலாடுதுறையில் நடைபெற்று வரும் காவிரி மகா புஷ்கரம் விழாவின் 12-ஆவது நாளில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று துலாக்கட்ட காவிரியில் புனித நீராடினர். 
காவிரி மகா புஷ்கரம் விழாவின் 12-ஆவது நாளில், துலாக்கட்ட காவிரியில் புனித நீராடிய திரளான பக்தர்கள்.
காவிரி மகா புஷ்கரம் விழாவின் 12-ஆவது நாளில், துலாக்கட்ட காவிரியில் புனித நீராடிய திரளான பக்தர்கள்.

மயிலாடுதுறையில் நடைபெற்று வரும் காவிரி மகா புஷ்கரம் விழாவின் 12-ஆவது நாளில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று துலாக்கட்ட காவிரியில் புனித நீராடினர். 
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ்கரம் விழா செப்.12-ஆம் தேதி தொடங்கி 24 -ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இவ்விழாவின் 12-ஆவது நாளான சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள், யாக பூஜைகள், ஸ்ரீ சமுத்திரராஜன்-ஸ்ரீ காவிரித்தாய் திருகல்யாணம், சூரியனார்கோயில் ஆதீனத்துக்கு புஷ்பாஞ்சலி, காவிரி ஆரத்தி வழிபாடுகள் நடைபெற்றன.
காஞ்சி காமகோடி பீடாதிபதிகள், ஆதீன கர்த்தர்கள் அருளாசியுடன் நடைபெற்று வரும் இவ்விழா செப்.12-ஆம் தேதி தொடங்கியது.
சிறப்பு பூஜைகள்: சனிக்கிழமை காலை துலாக்கட்ட காவிரியின் வடகரையில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலை மண்டபத்தில் ருத்ர ஜெபம், மகா ருத்ரஹோமம், பூர்ணாஹூதி நடைபெற்றன. தொடர்ந்து விழா தொடங்கிய நாள் முதல் யாக சாலை பூஜைகளில் வைக்கப்பட்ட புனித நீர் மங்கள வாத்தியங்களுடன் கடங்களில் கொண்டு செல்லப்பட்டு, துலாக்கட்ட காவிரியில் சேர்க்கப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.
சூரியனார் கோயில் ஆதீனத்துக்கு புஷ்பாஞ்சலி: தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், கந்தபரம்பரை சூரியனார்கோயில் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகளுக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. 
காவிரி மகா புஷ்கரம் விழா ஒருங்கிணைப்பாளர் சென்னை எஸ். மகாலெட்சுமி, ஆன்மிகப் பற்றாளர் வளசை எஸ்.ஜெயராமன் ஆகியோர் புஷ்பாஞ்சலி செய்தனர். 
ஸ்ரீசமுத்திரராஜன்- ஸ்ரீ காவிரித்தாய் திருக்கல்யாண வைபவங்களை காவிரியின் வடகரையில் சிதம்பரம் தியாகப்பா தீட்சிதர் மற்றும் ராமகிருஷ்ண தீட்சிதரும், தென்கரையில் மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நிறுவனரும், முதல்வருமான ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியாரும் நடத்தி வைத்தனர்.
இந்நிகழ்ச்சிகளில், காவிரி மகா புஷ்கரம் விழாவின் தலைவர் சுவாமி ராமானந்தா, செயலாளர் முத்துக்குமாரசாமி, பொருளாளர் எஸ். சீதாராமன், துணைத் தலைவர் ஜெகவீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
இன்று நிறைவு: காவிரி மகா புஷ்கரம் விழா ஞாயிற்றுக்கிழமை (செப்.24) காலை 11 மணியளவில் திருக்கொடி இறக்கத்துடன் நிறைவு பெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவிரியில் புனித நீராடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com