ஆம்புலன்ஸ் முதல் டயாபர்ஸ் மாற்றுவது வரை எல்லாவற்றுக்குமே விலையுண்டு; எதற்கு எவ்வளவு?

ஆம்புலன்ஸ் முதல் டயாபர்ஸ் மாற்றுவது வரை எல்லாவற்றுக்குமே விலையுண்டு; எதற்கு எவ்வளவு?

ஆம்புலன்ஸ் முதல் குழந்தைக்கு டயாபர் மாற்றுவது வரை எல்லாவற்றுக்குமே ஒரு விலையுண்டு. முற்றிலும் இலவச மருத்துவம் அளிக்கும் அரசு மருத்துவமனைகளில்தான் இந்த விலைப்பட்டியல் நீள்கிறது.


ஆம்புலன்ஸ் முதல் குழந்தைக்கு டயாபர் மாற்றுவது வரை எல்லாவற்றுக்குமே ஒரு விலையுண்டு. முற்றிலும் இலவச மருத்துவம் அளிக்கும் அரசு மருத்துவமனைகளில்தான் இந்த விலைப்பட்டியல் நீள்கிறது.

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்கள் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்குவது என்பது இன்றோ நேற்றோ நடக்கும் விவகாரம் அல்ல, பல ஆண்டுகளாக எந்தவொரு இடையூறும் இல்லாமல் நடந்து கொண்டிருக்கும் விஷயம்தான்.

அதைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று விட்டுவிட முடியாது. அதாவது, ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸில் கொண்டு வருவது முதல், குழந்தைக்கு டயாபர் மாற்றுவது வதை எல்லாமே ஒரு 'பிரைஸ் டேக்'குடன்தான் வருகிறது. எதற்கெல்லாம் எவ்வளவு கேட்கிறார்கள், எவ்வளவு கொடுக்கப்படுகிறது என்று விரிவாகப் பார்க்கலாம்.

அனைத்து சேவைகளும் இலவசம் என்ற அடிப்படைக் கொள்கையோடு இயங்கி வரும் அரசு மருத்துவமனையில், பிரசவ வலியோடு வரும் கர்ப்பிணிப் பெண்ணை பிரசவ அறைக்குள் அழைத்துச் செல்ல ஊழியருக்கு ரூ.500 லஞ்சம் கொடுக்கப்பட்டே ஆக வேண்டும்.

500 ரூபாயா என்று அதிர்ச்சியுறும் பெற்றோருக்கு, இது சுகப்பிரசவம் என்பதால் தான் 500 ரூ. இதே சிசேரியன் என்றால் அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்ல 800 ரூபாய் கேட்போம் என்று அடாவடியான பதில் கிடைத்துள்ளது. விருதுநகரைச் சேர்ந்த இளைய பெருமாள் தனது மகளை எழும்பூர் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைக்குக் கொண்டு வந்த போது ஏற்பட்ட அனுபவம்தான் இது.

ஏழை, எளிய மக்களும் பயன்பெறும் வகையில் ஏற்படுத்தப்பட்ட 108 இலவச ஆம்புலன்ஸ் மூலம் அரசுக்கு வேண்டுமானால் வருமானம் இல்லாமல் போகலாம். அதனை இயக்குவர்களுக்கு அல்ல. 

பிரசவ வலி ஏற்பட்ட தனது சகோதரியை அழைத்துக் கொண்டு வந்த கவிதா, "ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தன்னிடம் ரூ.500 கேட்டார்" என்கிறார்.

எங்களுக்கு ஏதோ மிகப்பெரிய உதவியை அவர்கள் செய்திருக்கிறார்கள் என்ற அடிப்படையில் கொஞ்சமும் அஞ்சாமல் 500, 1000 ரூபாய் என கேட்பதும், அதையும் அடாவடியாகக் கேட்பதும் கொஞ்சமும் சரியில்லை என்கிறார் ராஜேஸ்வரி.

ஐசியு, இன்குபேட்டர் போன்றவற்றில் வைத்திருக்கும் குழந்தைகளுக்கு டயாபர் மாற்றுவதன் விலை எவ்வளவு தெரியுமா? வெறும் 50 ரூ. மட்டுமே. 'தங்களது மிக கடினமான பணி நேரத்துக்கு இடையே, ஒரு குழந்தைக்காக நேரம் ஒதுக்கி டயாப்பர் மாற்றுவது என்பது என்ன அவ்வளவு எளிதான வேலையா? இல்லையே? அதற்காக 50 ரூபாய் கட்டணம் வசூலிப்பது சொல்லப்போனால் குறைவுதான்' என்பார்கள், யாராவது எதற்கு 50 ரூபாய் என்று கேட்டால்.

ஒரு வேளை ஆம்புலன்ஸில் வந்து 500 ரூ கொடுத்த பிறகு, பெண்ணை பிரசவ அறைக்கு அழைத்துச் செல்ல 500 ரூபாய் கொடுத்து, குழந்தையும் பிறந்து விட்டால் அப்புறம் என்ன பெண் குழந்தையாக இருந்தால் (?) ரூ.500ம், ஆண் குழந்தையாக இருந்தால் ரூ.800ம் மருத்துவமனை ஊழியர்களுக்கு 'அன்பளிப்பாக' கொடுத்துவிட வேண்டும்.

15 நாட்களுக்கு முன்பு தனது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கும் நிலையில், அஃப்லுதீன் இந்த தகவலை தெரிவித்தார்.

இதெல்லாம் குறித்து அறிந்தும் அறியாமலும் இருக்கும் மருத்துவர்கள் சொல்வது என்னவென்றால்,"பொதுமக்கள் முன் வந்து இது குறித்து புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்" என்பதுதான்.

லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவ்வப்போது மருத்துவமனையில் அதிரடி ஆய்வுகளை நடத்துகிறார்கள். நோயாளிகளைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம், யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறோம் என்று மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஷாந்தி குணசிங் கூறுகிறார்.

எங்களிடம் வந்து நேரடியாக புகார் கொடுக்க அச்சப்பட்டால், மருத்துவமனையில் கொடுக்கும் கருத்துக் கேட்பு விண்ணப்பத்தில் கூட குறிப்பிடலாம் என்கிறார் அவர்.

ஆனால், இது குறித்து புகார் கொடுக்க பொதுமக்கள் யாரும் தயாராக இல்லை. மீண்டும் மருத்துவமனைக்கு வரும் போது, இங்கு பணியாற்றும் ஊழியர்களால் எங்களுக்கு தொல்லைகள் ஏற்படும் என்றே அவர்கள் அஞ்சுகிறார்கள்.

அதோடு, லஞ்சம் கொடுக்காதீர்கள் என்று மருத்துவர்கள் எங்களுக்குத்தான் கட்டளையிடுகிறார்களே தவிர, லஞ்சம் கேட்கக் கூடாது என்பதை கட்டளையாகவோ, நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊழியர்களுக்கு எச்சரிக்கையாகவோ கூறுவதில்லையே ஏன்? என்றும் பொது மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். 

இதற்கு மருத்துவர்கள் தரப்பில் இருந்து பதில் கிடைக்குமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com