கடலில் இரவில் தங்கி மீன்பிடிக்கும் விவகாரம்: நீதிமன்றம் மூலம் தீர்வு காண விசைப்படகு மீனவர்கள் முடிவு

கடலில் இரவில் தங்கி மீன்பிடிக்கும் விவகாரம்: நீதிமன்றம் மூலம் தீர்வு காண விசைப்படகு மீனவர்கள் முடிவு

கடலில் தங்கி மீன்பிடிக்க மீன்வளத் துறை அதிகாரிகள் அனுமதி மறுப்பதைத் தொடர்ந்து, நீதிமன்றம் மூலம் தீர்வுகாண முடிவு செய்துள்ளதாக விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடலில் தங்கி மீன்பிடிக்க மீன்வளத் துறை அதிகாரிகள் அனுமதி மறுப்பதைத் தொடர்ந்து, நீதிமன்றம் மூலம் தீர்வுகாண முடிவு செய்துள்ளதாக விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகுகள் தினமும் காலை 5 மணிக்கு சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு திரும்ப வேண்டும் என்பது மீன்வளத் துறை அதிகாரிகளின் உத்தரவு. ஆனால், இந்த உத்தரவை மீறி கடந்த 18 ஆம் தேதி 163 விசைப்படகுகளில் மீனவர்கள் இரவு கடலில் தங்கி மீன்பிடித்தனர்.

இதையடுத்து, கடலில் தங்கி மீன்பிடித்த 163 விசைப்படகுகளுக்கும் ஒரு மாதம் கடலில் மீன்பிடிக்கத் தடை விதித்து மீன்வளத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும், மீன்பிடித் துறைமுகமும் மூடப்பட்டது. அரசின் விதிமுறைப்படி கடலுக்குச் சென்று மீன்பிடிக்க விரும்பும் மீனவர்கள் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்கக் கோரி, விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் மீன்வளத் துறை இணை இயக்குநர் அமல்சேவியர், உதவி இயக்குநர் கணேஷ் நேரு, தூத்துக்குடி சார் ஆட்சியர் (பொறுப்பு) இரா. செழியன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கந்தசாமி, தூத்துக்குடி புறநகர் காவல் துணைக் கண்காணிப்பாளர்  சீமைச்சாமி, வட்டாட்சியர் ராமச்சந்திரன் ஆகியோர் பேச்சு நடத்தினர். இதில், விசைப்படகு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், மீன்பிடித் தொழிலாளர்கள் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

அப்போது, ஆழ்கடலில் மீன்பிடிக்கும் அனுமதியை மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் என்றும், தங்குகடல் மீன்பிடிக்கு அனுமதி கிடையாது என்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தகவலை எழுத்துப்பூர்வமாக தர வேண்டும் என விசைப்படகு உரிமையாளர்கள் கேட்டதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை (செப்டம்பர் 25) மாலைக்குள் எழுத்துப்பூர்வமாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், 2016 ஆம் ஆண்டு சட்டவிதிகளின்படி, தங்கு கடல் மீன்பிடிக்கு அனுமதிக்க வேண்டும். ஆனால், மீன்வளத் துறை அதிகாரிகள் 1983ஆம் ஆண்டு சட்டவிதிகளின்படி தங்குகடல் மீன்பிடிக்கு அனுமதி கிடையாது என கூறுகின்றனர். இதுதொடர்பாக மீன்வளத் துறை அமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். அதன்பிறகும் பிரச்னைக்கு முடிவு கிடைக்காவிட்டால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண முடிவு செய்துள்ளோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com