ஜெயலலிதா மரணம்: உரிய விசாரணை தேவை

ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்தபோது தாங்கள் கூறியது அனைத்தும் பொய் என அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ள நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
ஜெயலலிதா மரணம்: உரிய விசாரணை தேவை

ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்தபோது தாங்கள் கூறியது அனைத்தும் பொய் என அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ள நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்தபோது, அவரது உடல்நிலை குறித்து தாங்கள் தெரிவித்த தகவல்கள் அனைத்தும் பொய், அவரை யாரும் சந்திக்கவே இல்லை என்று அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்ட மேடையில் வெளிப்படையாகத் தெரிவித்து, பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்க மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.
அரசியல் சாசனத்தின் அடிப்படையில் பதவியேற்பு உறுதிமொழியேற்ற அமைச்சர் இவ்வாறு கூறியிருக்கும்போது, இந்த அரசு எந்த அளவுக்கு மக்களை ஏமாற்றியிருக்கிறது என்பதை உணர முடிகிறது.
மருத்துவமனையில் ஜெயலலிதாவை யாரும் சந்திக்கவே இல்லை என்றால், தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் 4 தொகுதி இடைத் தேர்தல்களில் தனது கட்சி வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கும் படிவத்தில் அவரிடம் எப்படி கைரேகை பெறப்பட்டது என்ற சந்தேகம் எழுகிறது.
வேட்புமனுவில் கையெழுத்துப் போட முடியாத நிலையில் கைரேகை மட்டுமே வைத்தவர், தனது வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி பொதுமக்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் கையெழுத்திட்டது எப்படி என்ற கேள்வியும் எழுகிறது. 
எனவே, முன்னாள் முதல்வரின் மரணத்தில் உள்ள மர்மத்தை இனிமேலும் மறைப்பது தமிழக மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம். 
இதற்கான தர்மயுத்தம் நடத்துவதாகச் சொல்லி மக்களை ஏமாற்றிய ஓ.பன்னீர்செல்வம், இப்போது பதவி கிடைத்ததும் மௌனம் காப்பது துரோகமாகும்.
முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு மத்திய அரசும் உதவியிருக்கிறது என்ற நிலையில், அவருடைய மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை வெளிக்கொணர வேண்டிய மிக முக்கியமான பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. எனவே, உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும். 
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: ஜெயலலிதா மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர், மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் விசாரிக்கப்பட வேண்டியுள்ளதால், நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. எனவே, உடனடியாக, பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில், விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். அவ்வாறு சிபிஐ விசாரிக்காவிட்டால் பணியில் இருக்கும் நீதிபதி மூலம் விசாரணை நடத்த வேண்டும். ஜெயலலிதா மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரைப் பார்த்ததாகவும், அவர் இட்லி, சட்னி சாப்பிட்டதாகவும் கூறியதெல்லாம் பொய் என்றும், அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் மரணத்தில் ஆயிரம் மர்மங்கள் இருப்பதை அமைச்சரின் பேச்சு உறுதி செய்திருக்கிறது.
ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து திண்டுக்கல் சீனிவாசன் மட்டும்தான் பொய்யான தகவல்களைக் கொடுத்தார் என்று கூற முடியாது. அப்போது முதல்வர் பொறுப்பில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் இதே தகவல்களைக் கூறியுள்ளனர். எனவே, ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கில் அமைச்சர்களையும் சேர்த்து அவர்களிடம் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். 
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பொய்களைத்தான் அறிவித்தோம் என்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் வாக்குமூலம், இவர்கள் சட்டப்படி நடக்காதவர்கள் என்பதற்கான சாட்சியாக அமைந்திருக்கிறது.
ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுகவினர் ரூ. 89 கோடி பணப் பட்டுவாடா செய்தார்கள் என்றுதான் தேர்தலையே தேர்தல் ஆணையம் நிறுத்தியது. 
ஆனால், இந்தக் குற்றங்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இத்தகைய மத்திய, மாநில அரசுகள் இருப்பது நாட்டுக்கு நல்லதல்ல.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com