கண்காணிப்பு வளையத்திற்குள் வருமா அரசு உதவி பெறும் பள்ளிகள்?

தமிழக அரசின் உதவியோடு செயல்பட்டு வரும் உதவி பெறும் பள்ளிகள், விதிமுறைகளை மீறி சுயநிதிப் பள்ளிகளைப் போல் செயல்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம்
கண்காணிப்பு வளையத்திற்குள் வருமா அரசு உதவி பெறும் பள்ளிகள்?

திண்டுக்கல்: தமிழக அரசின் உதவியோடு செயல்பட்டு வரும் உதவி பெறும் பள்ளிகள், விதிமுறைகளை மீறி சுயநிதிப் பள்ளிகளைப் போல் செயல்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 
1950-களின் பிற்பகுதியில் தமிழகத்தில் உள்ள அனைத்து சிறுவர்களும் கல்வி அறிவு பெற வேண்டும் என அப்போதைய தமிழக அரசு சார்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அன்றைய நிலையில் அரசுப் பள்ளிகள் அதிகம் இல்லாத காரணத்தால், அந்தந்த பகுதிகளில் உள்ள செல்வந்தர்களின் உதவியுடன் அரசு உதவி பெறும் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. உதவி பெறும் பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பு மட்டும், அந்தந்த தாளாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நடைமுறை இன்று வரை பின்பற்றப்பட்டு வருகிறது. 
உதவி பெறும் பள்ளிகள் மட்டுமின்றி, மெட்ரிக், சுய நிதி, சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத்திட்ட பள்ளிகள் என பல்வேறு நிலைகளில் கல்விக் கூடங்கள் வளர்ச்சிப் பெற்றுள்ளன. இந்த சூழலில் அரசின் அனைத்து வகையான உதவிகளையும் பெற்று இயங்கிக் கொண்டிருக்கும் பல்வேறு அரசு உதவிப் பெறும் பள்ளிகள், சுய நிதி பள்ளிகளைப் போல் கட்டணம் வசூலித்துக் கொண்டும், அரசின் விதிமுறைகளை மீறியும் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
நுழைவுவாயிலில் உள்ள பெயர் பலகையில் தனிநபர் பெயருடன் அரசு உதவி பெறும் பள்ளி என்ற வார்த்தையும் இடம் பெற்று வந்தது. ஆனால், காலப்போக்கில் அரசு உதவி பெறும் என்ற வார்த்தையை பயன்படுத்துவதை கௌரவக் குறைச்சலாக கருதி பெரும்பாலான நிர்வாகிகள் தவிர்த்து விட்டனர். இதனால், மக்கள் வரிப்பணத்தில் செயல்பட்டு வரும் இந்த பள்ளிகள் சுயநிதிப் பள்ளிகளாக சித்தரிக்கப்பட்டு, மாணவர்களிடம் கட்டண வசூலிலும் ஈடுபடுகின்றன.
உண்ணும் மாணவர்களுக்கு பள்ளிச் சீருடைகள் வழங்கப்படுகின்றன. உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகிகள் தங்களுக்கு விருப்பமான நிறத்தில் சீருடைகளை தேர்வு செய்வதால், அரசு சார்பில் வழங்கப்படும் சீருடைகள் பயனற்ற நிலையில் உள்ளன.
அதேபோல், 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணர்கள் கல்வியில் பின்தங்கினால், 10ஆம் வகுப்பின்போது தேர்ச்சி விகித்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அரசு உதவி பெறும் பள்ளிகள் வெளியேற்றி விடுகின்றன. இதுகுறித்தும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவதில்லை. மேலும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து விட்டு, 6 ஆம் வகுப்புக்கு அரசு உதவி பெறும் பள்ளியில் சேர நினைக்கும் மாணவர்களையும் அப் பள்ளிகள் புறக்கணித்து விடுகின்றன. இதன் காரணமாக அருகில் உள்ள அரசுப் பள்ளிகளை புறக்கணித்துவிட்டு, 1ஆம் வகுப்பில் சேர உதவி பெறும் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் செல்ல வேண்டிய கட்டாய நிலை உருவாக்கப்படுகிறது. இதன் காரணமாக பல அரசு தொடக்கப் பள்ளிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. 
இதுகுறித்து ஓய்வுப் பெற்ற கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நுழைவு நிலை வகுப்புகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறுவதைப் போல், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் சேர்க்கை நடைபெறும் போது கட்டணம் வசூலிக்கப்படுவதும், கூடுதலான மாணவர்களை சேர்ப்பதையும் தடுக்க முடியும். அதேபோல் ஆசிரியர்கள் நியமனம் செய்வதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான ஊதியத்தை அரசே வழங்குவதால், உதவி பெறும் பள்ளிகளில் உள்ள பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதி பிரிவுகளின் கீழ் வகுப்புகள் தொடங்குவதும் தடுக்கப்பட வேண்டும். 2 பிரிவுகளை சுய நிதியில் தொடங்கி விட்டு, அனைத்து மாணவர்களிடமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல் அரசு ஊதியத்தில் நியமிக்கப்படும் ஆசிரியர்களையும் சுயநிதி பிரிவுகளில் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இதுபோன்ற மாறுதல்கள் காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து, தமிழக அரசு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com