செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிய விவகாரம்: தருமபுரி மாவட்ட போலீஸார் விசாரிக்க உத்தரவு

ரெப்கோ வங்கியில் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றியது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை கோரிய வழக்கில், தருமபுரி மாவட்ட போலீஸார் ஒரு வாரத்துக்குள் உரிய விசாரணை
செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிய விவகாரம்: தருமபுரி மாவட்ட போலீஸார் விசாரிக்க உத்தரவு

ரெப்கோ வங்கியில் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றியது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை கோரிய வழக்கில், தருமபுரி மாவட்ட போலீஸார் ஒரு வாரத்துக்குள் உரிய விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ரெப்கோ வங்கி அதிகாரியான பி.கமலக்கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தருமபுரி ரெப்கோ வங்கி கிளையில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2017 மே மாதம் வரை முதன்மை மேலாளராகப் பணிபுரிந்தேன். 
ரெப்கோ வங்கியின் எஸ்.சி, எஸ்.டி ஊழியர் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளராகச் செயல்பட்டதால், வங்கியின் நிர்வாக இயக்குநர், உயரதிகாரிகள் செய்த ஊழலைச் சுட்டிக்காட்டினேன். 
இதனால் தன்னை பழிவாங்கும் நோக்கில் சென்னைக்கு இடமாறுதல் செய்யாமல், மதுரைக்கு இடமாற்றம் செய்துள்ளனர். 
7 வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.1 கோடிக்கும் அதிகமான மதிப்பிழந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளைப் பெற்றுக் கொண்டு, அவர்களின் வீட்டுக் கடனை பைசல் செய்ய உத்தரவாதம் அளித்ததாக என்மீது பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 
உண்மையில் செல்லாத நோட்டுகளைப் பெற்றுக் கொண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகே வங்கி நிர்வாகம் 7 பேரின் கடனை பைசல் செய்துள்ளது எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. 
இதுதொடர்பாக, தான் போலீஸில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே தன்னைப் பழிவாங்கும் நோக்குடன் தனக்கு எதிராகச் செயல்பட்ட ரெப்கோ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட வங்கி அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியது எப்படி என்பது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுதாரரின் புகார் மீது தருமபுரி மாவட்ட போலீஸார் ஒரு வாரத்தில் உரிய விசாரணை நடத்தி, அதில் முகாந்திரம் இருந்தால் எதிர் மனுதாரர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com