ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி.
ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 
இதற்கான உத்தரவை தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்டது. 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். அமைச்சர்கள் உள்ளிட்ட சில அதிமுகவினர் ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலா மீது சந்தேகப் புகார்களைத் தெரிவித்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு தொடர்பாக எந்த விசாரணைக்கும் தயார் என்று அறிவித்தார்.
சி.பி.ஐ., சர்வதேச விசாரணை அமைப்பான இன்டர்போல் போன்ற எந்த விசாரணை ஆணையம் அமைத்தாலும் அவற்றைச் சந்தித்து தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை அளிப்போம் என கடந்த மாதம் மேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தினகரன் அறிவிப்புச் செய்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.
இந்தச் சூழ்நிலையில், ஜெயலலிதா இறப்பு குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று கடந்த மாதம் 17 ஆம் தேதியன்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நீதி விசாரணைக்கான தலைவர் நியமனம் உள்ளிட்ட பணிகள் தொடங்கின.
நீதிபதி ஆறுமுகசாமி: நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும், அதற்கான நீதிபதி நியமிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசு உத்தரவு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து திங்கள்கிழமை (செப். 25) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி ஆறுமுகசாமி கோவை மாவட்டத்தில் தனது கல்வியை பயின்றுள்ளார்.
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அவர், வடக்கு நகராட்சி பள்ளியில் தனது பள்ளிப் படிப்பையும், கடந்த 1971-ஆம் ஆண்டில் அரசு கலை கல்லூரியில் பட்டப் படிப்பையும் பயின்றார். கடந்த 1974-ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்த அவர், 1998-ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
நீதித் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், 2009-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற பதிவாளராகவும், 2010-ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பொறுப்பு வகித்தார். கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரலில் ஓய்வு பெற்ற அவர், மும்பையில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். இதைத் தொடர்ந்து, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வின் நீதித் துறை உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 1974-ஆம் ஆண்டு முதல் நீதித் துறையின் பல்வேறு பொறுப்புகளை கீழ்நிலையில் வகித்து வந்து நீதிபதியாக பதவி உயர்வு பெற்றவர் ஆறுமுகசாமி. 
காரண-காரியங்கள்: ஜெயலலிதாவுக்கு மரணம் ஏற்படக் காரணங்கள் என்ன, அவருக்கு உடல் ரீதியாக இருந்த பிரச்னைகள், மருத்துவமனையில் இருந்த போது மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை முறைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விசாரணை ஆணையம் தனது விசாரணையை மேற்கொள்ளும். 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை, அங்கு சிகிச்சையின் போது உடனிருந்த மருத்துவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்த விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதங்கள் இருக்கக் கூடும் எனவும், அதன் பின்பு தேவைப்பட்டால் கால நீட்டிப்பு செய்யப்படும் எனவும் அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com