1,500 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க தமிழக அரசு ஒப்பந்தம்

சூரிய ஒளியில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்காக தமிழக அரசு நான்கு நிறுவனங்களுடன் செவ்வாய்க்கிழமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
1500 மெகாவாட் சூரிய சக்தி மின் கொள்முதல் ஒப்பந்தம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது. உடன், மின்சாரத் துறை அமைச்சர் பி. தங்கமணி
1500 மெகாவாட் சூரிய சக்தி மின் கொள்முதல் ஒப்பந்தம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது. உடன், மின்சாரத் துறை அமைச்சர் பி. தங்கமணி

சூரிய ஒளியில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்காக தமிழக அரசு நான்கு நிறுவனங்களுடன் செவ்வாய்க்கிழமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு: தமிழகத்தில் 1,500 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கு சூரிய மின்சக்தி நிலையங்கள் அமைப்பதற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுடன் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. இதன் அடிப்படையில் 16 நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் ரூ.3.47-க்கு மின்சாரம் வாங்குவதற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டது.
ஒப்பந்தத்தில் அதிகப்படியாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திடம் (என்.எல்.சி.) இருந்து 709 மெகாவாட் மின்சாரம் பெறப்படும். தில்லி, கர்நாடகம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் சென்னை, கோவை, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தமிழக நிறுவனங்களும் மின்சக்தி நிலையங்களை அமைக்க உள்ளன. திட்டத்துக்கு ஒரு மெகாவாட்டுக்கு ரூ.6 கோடி வீதம் 1,500 மெகாவாட்டுக்கு மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும். 
4 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்: இத்திட்டத்தின் முதல் கட்டமாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமானது என்.எல்.சி. இந்தியா, ராசி கிரீன் எர்த் எனர்ஜி, நர்பேராம் விஸ்ராம், என்வீஆர் எனர்ஜி ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மீதமுள்ள 12 நிறுவனங்களுடன் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
5 ஆயிரம் மெகாவாட் இலக்கு: தமிழகத்தில் தற்போது 1, 747 மெகாவாட் திறன் கொண்ட சூரியமின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இந்த ஆண்டுக்குள் 700 மெகாவாட் திறன் கொண்ட சூரியமின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட உள்ளன. அதனுடன், தற்போது நிறுவப்படவுள்ள 1,500 மெகாவாட் திறன் சூரியமின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 2021-க்குள் 5 ஆயிரம் மெகாவாட் சூரியமின் உற்பத்தி என்ற இலக்கை அடைய முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், எரிசக்தித் துறை செயலர் ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எம்.சாய்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com