ஜெயலலிதா மரணம் குறித்து உயர்நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வலியுறுத்தல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக உயர்நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக உயர்நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
இதுகுறித்து, அவர் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்போர் சங்கத்தின் விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் நிர்வாகிகள் கூட்டம் விழுப்புரத்தில் இன்று நடைபெற்றது. கறிக்கோழி வளர்ப்போருக்கு கிலோவுக்கு ரூ.3.50 மட்டுமே தனியார் நிறுவனங்களால் நீண்ட காலமாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து, அரசு மூலம் பேசி கிலோவுக்கு ரூ.7.50 வழங்க கேட்டு வருகிறோம்.
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புதன்கிழமை நடத்துகிறது. இப்போராட்டத்தின்போது, சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி, ரூ.2 ஆயிரம் கோடி கரும்பு நிலுவைத் தொகை, பயிர்க் காப்பீடு தொகை, வறட்சியால் இறந்த 350 விவசாயிகளுக்கும் நிவாரணம், 6 லட்சம் விவசாயிகள் மின் இணைப்பு என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படும்.
மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இருந்தும், ஆற்று மணல் கொள்ளைக்கு துணை போகும் பொருட்டு, பாசனத்துக்கு திறந்து விடப்படாமல் உள்ளது. ஓரிரு நாளில் பாசனத்துக்கு தண்ணீரை திறந்துவிட வேண்டும். இல்லையெனில், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விவசாயிகளின் முதல் கட்டப் போராட்டம் தொடங்கும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறித்து, அமைச்சர்களே சந்தேகம் தெரிவித்துப் பேசுவதால், மர்மம் அதிகரித்துள்ளது. எனவே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதியின் நேரடி விசாரணை என்பது சரியாகாது. இந்த விவகாரத்தில் ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் என பல தரப்பினருக்கு தொடர்புள்ளதால், உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். விசாரணை அறிக்கையை 15 தினங்களுக்கு ஒருமுறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com