ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்தேன்: அமைச்சர் நிலோபர் கபீல்

அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை பார்த்ததாக அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்தேன்: அமைச்சர் நிலோபர் கபீல்

புதுதில்லி: அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை பார்த்ததாக அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்துள்ளார்.

'மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை நாங்கள் பார்த்தோம். அவர் இட்லி, சட்டினி சாப்பிட்டார் என்று கூறியது பொய்; அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்' என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கடந்த சில தினங்களுக்கு முன் கருத்துத் தெரிவித்திருந்தார். திண்டுக்கல் சீனிவாசனின் இந்தக் கருத்து தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை கிளப்பியது. அவரை தொடர்ந்து அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அதே கருத்தை கூறியிருந்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணைக்கமிஷன் அமைத்து தமிழக அரசு திங்கள்கிழமை (செப்.25) உத்தரவிட்டது. 

இதற்கிடையே, நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் ஜெயலலிதாவை நேரில் சென்று பார்த்தோம் என்று தெரிவித்தது மீண்டு பரபரப்பை கிளப்பியது. 

இந்நிலையில், தில்லியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தேசிய மாநாட்டில் தமிழகத் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் பங்கேற்றுப் பேசினார்.

இன்று தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிலோபர் கபீல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை, அமைச்சர்கள் எல்லோரும் குழுவாக சென்று பார்த்தோம். அவர் அவரச சிகிச்சை பிரிவில் இருந்து 2-வது வார்டுக்கு மாற்றும் போது நான் சந்தித்தேன் என்று தெரிவித்தார். 

மேலும் மற்ற அமைச்சர்களின் கருத்து குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com