2019 நாடாளுமன்ற தேர்தல்: சென்னையில் சமூக வலைத்தள 'யுத்த அறையைத்' துவங்கியது பாஜக! 

2019-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில், கட்சிக்கான சமூக வலைத்தள 'யுத்த அறை' ஒன்றை அக்கட்சி துவங்கியுள்ளது. 
2019 நாடாளுமன்ற தேர்தல்: சென்னையில் சமூக வலைத்தள 'யுத்த அறையைத்' துவங்கியது பாஜக! 

சென்னை: 2019-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில், கட்சிக்கான சமூக வலைத்தள 'யுத்த அறை' ஒன்றை அக்கட்சி துவங்கியுள்ளது. 

2014-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி படு தோல்வி கண்டது. அக்கட்சியின் சார்பாக பொன்.ராதாகிருஷ்ணன் மட்டும் வெற்றி பெற்றார்.அதேபோல கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்ட அக்கட்சிக்கு மீண்டும் தோல்வியே கிடைத்தது.

இருந்த போதிலும் மனம் தளராத அந்தக் கட்சியானது 2019-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னையில் பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில், கட்சிக்கான சமூக வலைத்தள 'யுத்த அறை' ஒன்றை இன்று துவங்கியுள்ளது.

அக்கட்சியின் தேசிய பொதுச் செயலர் முரளிதர ராவ், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை முன்னிலையில் இன்று இதனை துவங்கி வைத்தார். இந்த சமூக வலைத்தள 'யுத்த அறை' மூலம் அக்கட்சி செய்யத்  திட்டமிட்டிருக்கும் செயல்கள் பின்வருமாறு:

முதலில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் குறைந்த பட்சம் 10 வாட்ஸ் ஆப் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். பின்னர் இந்த குழுக்களானது வாக்குச் சாவடிக்கு ஒன்று என விரிவு செய்யபப்ட்ட வேண்டும். உள்ளூரின் உள்ள கட்சி நிர்வாகிகளே இதன் உறுப்பினர்களாவார்கள்.

இதன் மூலம் அங்குள்ள பகுதி மக்களின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தவும் தேவைப்பட்டால் போராட்டங்களை ஒருங்கிணைக்கவும் வேண்டும். அவற்றைத் தீர்க்க அரசு அதிகாரிகளை அணுக வேண்டும்.மிக முக்கியமாக இத்தகைய குழுக்கள் மூலம் முதல் தலைமுறை வாக்காளர்களை குறிவைத்து செயல்பட வேண்டும்.   

கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவினைச் சேர்ந்தவர்கள் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் அணியினைச் சேர்ந்தவர்களுக்கு, மத்திய பாஜக அரசின் சாதனைகளையம், மக்கள் நலத் திட்டங்களையும்  'மீம்' வடிவில் உருவாக்குவதற்குப்  பயிற்சி கொடுப்பார்கள். அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக அரசாங்கம்  தொடர்பாக இணையத்தில் நடைபெறும் எதிர்மறை பிரசாரதிற்கு பதில் கொடுக்கவும் அவர்களுக்கு பயிற்சி தரப்படும்.

தற்போதைய தமிழக அரசியல் சூழலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் உண்டான 'வெற்றிடம்' மற்றும் திமுக  தலைவர் கருணாநிதியின் செயல்பட இயலாத தன்மை ஆகியவற்றின் காரணமாக தங்களுக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக கருதி பாஜக இத்தனை தீவிரமாக செய்லபடுகிறது.   

சமூக வலைத்தள 'யுத்த அறை' மற்றும் தீவிர பிரச்சாரம் உள்ளிட்ட உபாயங்கள் முன்னரே அக்கட்சியினால் பல வட மாநில தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டவைதான். ஆனால் தமிழகத்தில் பாஜகவின் இத்தகைய பிரசாரங்களை இணையத்தில் எதிர்கொள்ள முன்னரே வலுவான கூட்டு செயல்பாடுகள் கொண்ட அமைப்புகள் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com