குறைந்த செலவில் கழிப்பறைகள்: பொறியியல் மாணவர்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்

கிராமப்புறங்களில் குறைந்த செலவில் கழிப்பறைகள் அமைக்கும் தொழில்நுட்பத்தை பொறியியல் மாணவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் வலியுறுத்தினார்.
'தூய்மையே சேவை' விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னிட்டு, சென்னை அண்ணா பல்கலைக்கழக ரோஜா பெண்கள் விடுதி சமையலறையை புதன்கிழமை ஆய்வு செய்த ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
'தூய்மையே சேவை' விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னிட்டு, சென்னை அண்ணா பல்கலைக்கழக ரோஜா பெண்கள் விடுதி சமையலறையை புதன்கிழமை ஆய்வு செய்த ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

கிராமப்புறங்களில் குறைந்த செலவில் கழிப்பறைகள் அமைக்கும் தொழில்நுட்பத்தை பொறியியல் மாணவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் வலியுறுத்தினார்.
'தூய்மையே சேவை' பிரசார இயக்கத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பேசியது:
104 செயற்கைக்கோள்களை ஒன்றாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்த நாம் தூய்மையில் பின்தங்கியுள்ளோம். தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல் எனப் பலதுறைகளில் முன்னேற்றம் கண்டுள்ள நமது தேசம் தூய்மையிலும் சிறந்து விளங்க வேண்டியது அவசியம். மகாத்மா காந்தி சுதந்திரத்துக்காக மட்டுமல்ல தூய்மையான தேசத்தைப் படைப்பதற்காகவும் போராடினார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குப்பைகள் தேங்கிக் கிடப்பது, நீர்நிலைகள் மாசடைந்து இருப்பது, திறந்தவெளியில் கழிப்பது போன்ற சுகாதாரமற்ற நடவடிக்கைகளில் முற்றிலுமாக மாற்றம் தேவை. 
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வளாகத் தூய்மையைக் கடைப்பிடிப்பதுடன் கழிவறைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்படும் இடங்களில் கூடுதலாக கழிவறைகள்அமைக்கப்பட வேண்டும். கிராமப்புறங்களிலும் இது தொடர வேண்டும். குறைந்த செலவில் கழிப்பறைகள் கட்டும் தொழில்நுட்பத்தை பொறியியல் மாணவர்கள் கண்டறிய வேண்டும் என்றார் அவர். 
இந்த நிகழ்ச்சியில், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், உயர் கல்வித் துறைச் செயலாளர் சுனில் பாலிவால், ஆளுநரின் முதன்மைச் செயலர் ரமேஷ்சந்த் மீனா, பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எஸ்.கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
விடுதியில் ஆய்வு: முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், உணவு சமைக்கும் இடம், மாணவர்கள் மற்றும் மாணவிகள் விடுதி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். 
இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்த ஆளில்லா விமானங்களைப் பார்வையிட்ட அவர், விமானத்தின் வடிவமைப்பு குறித்து மாணவர்களிடம் ஆர்வத்துடன் கேட்டறிந்தார். அந்த விமானத்தை அவர் தானே இயக்கியும் பார்த்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com