ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழல் குறித்து ஆணையம் விசாரிக்கும்: தமிழக அரசு அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரிக்கும்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரிக்கும் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை அறிக்கையை அவர் மூன்று மாதங்களில் அரசுக்கு அளிப்பார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று கடந்த மாதம் 17 -ஆம் தேதி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நீதி விசாரணைக்கான தலைவர் நியமனம் உள்ளிட்ட பணிகள் தொடங்கின.
நீதிபதி ஆறுமுகசாமி: நீதி விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும், அதற்கான நீதிபதி நியமிக்கப்படாமல் இருந்தது. 
இந்த நிலையில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதற்கான அரசு உத்தரவு வெளியிடப்பட்டு, தமிழக அரசிதழில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22 -ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான சூழ்நிலைகள் மற்றும் சந்தர்ப்பங்கள் குறித்து விசாரணை ஆணையம் விசாரிக்கும். மேலும், அவர் கடந்த ஆண்டு டிசம்பர் 5 -ஆம் தேதி மரணம் அடைந்தார்.
மூன்று மாதங்களில்... ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவர் மரணம் அடைந்தவரை, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரிப்பார். மேலும், அவர் இந்த விசாரணை அறிக்கையை மூன்று மாதங்களில் அரசுக்கு சமர்ப்பிப்பார் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com