ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 50,000 கன அடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியில் வியாழக்கிழமை மாலை நிலவரப்படி நீர்வரத்து நொடிக்கு 50,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
பிராதான அருவியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்.
பிராதான அருவியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியில் வியாழக்கிழமை மாலை நிலவரப்படி நீர்வரத்து நொடிக்கு 50,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், அருவிகளில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் ஒகேனக்கல் காவிரிக்கு வந்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாள்களாக நீர்வரத்து மழையளவு பொறுத்தவாறு அதிகரித்தும், சரிந்தும் வருகிறது. 
இந்த நிலையில், கடந்த இரு நாள்களாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவிரி ஆற்றுப் பகுதியிலும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால், புதன்கிழமை மாலை ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து நொடிக்கு 24,000 கனஅடியாக இருந்தது. வியாழக்கிழமை காலை நொடிக்கு 43,000 கன அடியாகவும், அன்றைய தினம் மாலை நொடிக்கு 50,000 கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால், பிலிகுண்டுலுவிலிருந்து ஊட்டமலை வழியாக ஒகேனக்கல் அருவிக்கு தண்ணீர் ஆற்றின் கரைகளை தொட்டப்படி செந்நிறத்தில் வருகிறது. மேலும், பிரதான அருவிகளுக்குச் செல்லும் நடைபாதையை மூழ்கடித்தப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஒடுகிறது. அதேபோல, ஐந்தருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிப் பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நுழைவு வாயில் அடைப்பு: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதை தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி பிரதான அருவிக்குச் செல்லும் நுழைவுவாயில் கதவு வியாழக்கிழமை காலை அடைக்கப்பட்டது. மேலும், பாதுகாப்புக் கருதி அருவிகளில் குளிக்கவும், பரிசலில் செல்லவும் விதிக்கப்பட்டிருந்தது தடை நீடிக்கிறது. அதேபோல, முதலைப்பண்ணை, ஊட்டமலை உள்ளிட்ட ஆற்றுப்பகுதிகளில் ஊர்க்காவல் படையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கரையோரப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com