ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவின் நகலை தாக்கல் செய்யுங்கள்: தமிழக அரசுக்கு உத்தரவு! 

ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு அடிப்படையான உச்ச நீதிமன்ற உத்தரவின் நகலை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவின் நகலை தாக்கல் செய்யுங்கள்: தமிழக அரசுக்கு உத்தரவு! 

மதுரை: ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு அடிப்படையான உச்ச நீதிமன்ற உத்தரவின் நகலை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பின் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுக் காற்றால் இப்பகுதியில் வசிப்பவர்கள் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் 1996-ம் ஆண்டிலிருந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். நீதிமன்றங்களில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய சிப்காட் நிறுவனம் மூலம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இப்போராட்டத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆதரவு அளித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எம்ஜிஆர் திடலில் வரும் ஏப்ரல் 8-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி காவல் துறையில் மனு அளித்தோம். ஆனால், பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து தூத்துக்குடி காவல் உதவி ஆணையர் கடந்த 30-ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.

இது சட்டவிரோதம். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திவரும் பொதுமக்களுக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடத்துவது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். இதனால் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுத்து தூத்துக்குடி காவல் உதவி ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, தூத்துக்குடி எம்ஜிஆர் திடலில் ஏப்ரல் 8-ல் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியும், பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும்”

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் செவ்வாய்க்கிழமை அன்று

விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலை இயங்கிவருவதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை இயங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகலை புதன்கிழமை அன்று தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com