சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் நாங்கள் பொறுப்பல்ல: வேல்முருகன் எச்சரிக்கை! 

ஐபிஎல் போட்டியில் விளையாட சென்னை வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் நாங்கள் பொறுப்பல்ல என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் நாங்கள் பொறுப்பல்ல: வேல்முருகன் எச்சரிக்கை! 

சென்னை: ஐபிஎல் போட்டியில் விளையாட சென்னை வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் நாங்கள் பொறுப்பல்ல என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து, கடையடைப்பு, ரயில் மறியல், உண்ணாவிரதப் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என பல தரப்பினரும், போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

சில அரசியல் கட்சியினர், சேப்பாக்கம் மைதானத்திற்குள், ரசிகர்கள் போல ஊடுருவி, ரகளையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து மைதானத்தை சுற்றி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உளவுப்பிரிவு போலீஸார், ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐபிஎல் போட்டியை வேறு மாநிலத்திற்கு மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் திட்டமிட்டப்படி சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ப்பதற்காக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர், அடையாறில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓட்டலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர்களுக்கும், சேப்பாக்கம் மைதானத்திற்கும் கூடுதல் ஆணையர்கள் தலைமையில் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாட சென்னை வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் நாங்கள் பொறுப்பல்ல என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது. ஐபிஎல் போட்டியை நிறுத்த அனைத்து ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும். சென்னை அணியில் உள்ள தமிழ் பேசும் வீரர்கள் தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவேண்டும்.

சென்னையில் தங்கியிருக்கும் நீங்கள் ஷாப்பிங் செல்வீர்கள், திரைப்படங்களுக்கு செல்வீர்கள்..அல்லது உங்களுக்கு விருப்பமான உணவுகளை சாப்பிடுவதற்காக வெளியே செல்வீர்கள். அங்கெல்லாம் உங்களுக்கு ஜனநாயக ரீதியிலான எதிர்ப்புகளைத் தாண்டி, வேறு விதமான விளைவுகள் நடந்தால் அதற்கு வேல்முருகனோ, தமிழக வாழ்வுரிமை அமைப்போ அல்லது காவிரி உரிமை மீட்பு இயக்கமோ பொறுப்பாகாது.

இதனை எல்லாம் கிரிக்கெட் வீரர்களின் வீடுகளில் அவர்களது மனைவிகள் மற்றும் தாயார்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.

இவ்வாறு வேல்முருகன் தெரிவித்தார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com