முதலீட்டாளர்களைக் குறிவைக்கும் ராணுவ தளவாடக் கண்காட்சி

ராணுவ தளவாட உற்பத்தித் துறையில் பெரு, சிறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ராணுவ தளவாடக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 

ராணுவ தளவாட உற்பத்தித் துறையில் பெரு, சிறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ராணுவ தளவாடக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 
காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் மிகப்பெரிய அளவில் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
ராணுவத் துறையின் ஒவ்வொரு பிரிவும் தங்களது தயாரிப்புகளைக் காட்சிக்கு வைக்கவுள்ளன. தளவாடங்கள் உள்பட ராணுவத் துறையின் உற்பத்தியில் பெரு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினரையும் ஈடுபடுத்தும் முயற்சியாகக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராணுவ தளவாடக் கண்காட்சி புதன்கிழமை (ஏப்.11) முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நான்கு தினங்களிலும் தொழில் துறையினர் காட்சி அரங்குகளைப் பார்வையிட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதன் மூலம், அவர்கள் ராணுவ உற்பத்தித் துறையின் குறிப்பிட்ட பிரிவினைத் தேர்ந்தெடுத்து அதில் முதலீடுகளைச் செய்திட முடியும் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
குழந்தைகளுக்கு அனுமதியில்லை: கண்காட்சி நான்கு நாள்கள் நடைபெற்றாலும் அதில் முதல் மூன்று நாள்களுக்கு அதாவது ஏப். 13-ஆம் தேதி வரை குழந்தைகளுக்கு அனுமதியில்லை. முற்றிலும் தொழில் துறையினர் மட்டுமே பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண்காட்சியில் பங்கேற்கும் தொழில் துறையினர் வர்த்தகம் தொடர்பான கோட்-சூட் போன்ற உடைகளை மட்டுமே அணிய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 
கடவுச்சீட்டு, அரசு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை ஆகியவற்றை அடையாள ஆவணச் சான்றாகப் பயன்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கடைசி நாளில் பார்க்கலாம்: ராணுவத் துறையினர் தயாரிக்கும் தயாரிப்புகளை பொது மக்கள் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண்காட்சியின் கடைசி நாளான 14-ஆம் தேதியன்று காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரையில் பொது மக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் ஆதார் அட்டை, அரசு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஆகியவற்றை அடையாள ஆவணமாகப் பயன்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com