ஹோமியோபதி மருத்துவர்கள் வேறு மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கக் கூடாது: மத்திய அரசு உத்தரவு

ஹோமியோபதி மருத்துவர்கள் தாங்கள் சார்ந்துள்ள மருத்துவ முறையில் மட்டுமே சிகிச்சையை அளிக்க வேண்டும் என மத்திய ஹோமியோபதி கவுன்சிலின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது
ஹோமியோபதி பயிலரங்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில், ஹோமியோபதி மருத்துவத்தைக் கண்டுபிடித்த சாமுவேல் ஹானிமன் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தும் மத்திய ஹோமியோபதி கவுன்சிலின் தலைவர் ராம்ஜி சிங். 
ஹோமியோபதி பயிலரங்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில், ஹோமியோபதி மருத்துவத்தைக் கண்டுபிடித்த சாமுவேல் ஹானிமன் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தும் மத்திய ஹோமியோபதி கவுன்சிலின் தலைவர் ராம்ஜி சிங். 

ஹோமியோபதி மருத்துவர்கள் தாங்கள் சார்ந்துள்ள மருத்துவ முறையில் மட்டுமே சிகிச்சையை அளிக்க வேண்டும் என மத்திய ஹோமியோபதி கவுன்சிலின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று கவுன்சிலின் தலைவர் ராம்ஜி சிங் கூறினார்.
உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு ஹோமியோபதி சிகிச்சை குறித்த இரண்டு நாள் பயிலரங்கம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்.10) தொடங்கியது. அதில் ராம்ஜி சிங் பேசியது:
அதிக எண்ணிக்கையிலான ஹோமியோபதி மருத்துவர்களை உருவாக்கும் விதத்தில், கல்லூரிகளைத் தொடங்குவதற்கான விதிமுறைகள் சற்று தளர்த்தப்பட்டுள்ளன. முதலில் கல்லூரிகளைத் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும். அதன் பின்பு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தக் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டு அங்கு உட்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை ஆகியவை சரியான விகிதத்தில் உள்ளதா என்பதைக் கண்டறிந்த பின்பே, மீண்டும் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
பிற மருத்துவ முறைகளில் சிகிச்சை அளிக்கக் கூடாது: மேலும், மத்திய ஹோமியோபதி கவுன்சிலின் சார்பில் நாடு முழுவதும் உள்ள பதிவு செய்யப்பட்ட ஹோமியோபதி மருத்துவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஹோமியோபதி மருத்துவச் சிகிச்சை மற்றும் மருந்துகளை மட்டுமே அவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என்றும், அலோபதி உள்ளிட்ட பிற மருத்துவ முறைகளைப் பின்பற்றி சிகிச்சை அளிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் எஸ். கீதாலட்சுமி பேசுகையில், தமிழகத்தில் மட்டும்தான் அனைத்து ஆயுஷ் படிப்புகளுக்கும் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 
அவை அனைத்தும் ஒரே பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. ஹோமியோபதித் துறை இன்னும் அதிக அளவில் வளர்ச்சியடைய வேண்டும். அதற்காக இந்தத் துறையில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஹோமியோபதி துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படுகிறது என்றார் அவர்.
தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சிலின் தலைவர் டாக்டர் ஆர்.ஞானசம்பந்தம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com