சென்னை ஐஐடியில் பிரதமர் மோடிக்கு எதிராக நடந்த 'மவுனப் போராட்டம்'! 

சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவன கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடிக்கு எதிராக, ஐஐடி மாணவர்கள் சிலர் 'மவுனப் போராட்டம்' நடத்தியுள்ளனர்.
சென்னை ஐஐடியில் பிரதமர் மோடிக்கு எதிராக நடந்த 'மவுனப் போராட்டம்'! 

சென்னை: சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவன கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடிக்கு எதிராக, ஐஐடி மாணவர்கள் சிலர் 'மவுனப் போராட்டம்' நடத்தியுள்ளனர்.

சென்னையை அடுத்துள்ள திருவிடந்தையில் மத்திய பாதுகாப்புத் துறையின் சார்பில் பாதுகாப்புத் தளவாட நிறுவனங்களின் கண்காட்சியினை துவக்கி வைக்க பிரதமர் மோடி வியாழன் அன்று சென்னை வருகை தந்தார்.

விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் நேராக திருவிடந்தை சென்ற அவர், அங்கு கண்காட்சியினைத் துவக்கி வைத்த பிறகு, சாலை மார்க்கமாக அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் வந்து, அங்கு நடைபெற உள்ள பொன்விழா நினைவு கட்டட திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பதாகத் திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது.

ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, 12 ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக , அவருக்கு கருப்புக் கொடி காட்ட வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பொது மக்களுக்கு முன்னரே வேண்டுகோள் விடுத்துள்ளன. அதன்படி சென்னை முழுவதும் பல்வேறு பகுதிகளில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டன.

எனவே தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்கும் பொருட்டு திருவிடந்தையில் இருந்து சாலை மார்க்கத்திற்குப் பதிலாக, அங்கிருந்தும் ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் இடத்திற்கு பிரதமர் வருவது  என்று  முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அருகில் உள்ள ஐஐடி வளாக மைதானத்தில் பிரதமர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். அங்கிருந்து கார் மூலம் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு பிரதமரின் வாகனமானது சென்ற பொழுது, அங்கு இருந்த ஐஐடி மாணவர்கள் தங்கள் கைகளில் அட்டைகளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று எழுதி அமைதியாக வழி ஓரம் நின்று போராடினார்கள்.

வெளியில் எத்தனையோ போராட்டங்களில் இருந்து தப்பிக்க முயன்ற பிரதமர் மோடி, மாணவர்களின் மவுனப் போராட்டத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com