கலை, அறிவியல் படிப்புக்கும் வேண்டும் ஒற்றைச் சாளர முறை

தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையில் நடைபெறும் பல்வேறு குளறுபடிகளுக்குத் தீர்வு காண, ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இந்த
கலை, அறிவியல் படிப்புக்கும் வேண்டும் ஒற்றைச் சாளர முறை

தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையில் நடைபெறும் பல்வேறு குளறுபடிகளுக்குத் தீர்வு காண, ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இந்த ஆண்டு வலுப்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் என்று ஏராளமான தொழிற்கல்வி பயிலுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், கிராமப்புற, ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு வாய்ப்பதோ கலை, அறிவியல் படிப்புகள்தான். சில ஆயிரங்களில் படிப்பை முடித்து ஏதாவது ஒரு பட்டத்துடன், ஏதாவது ஒரு வேலையைத் தேடிக் கொள்ளலாம் என்ற நடுத்தர குடும்பத்து மனோபாவமுள்ள மாணவர்களுக்கு கைகொடுக்கும் இந்தக் கலை, அறிவியல் படிப்புகளில் தற்போது உள்ள மாணவர் சேர்க்கை நடைமுறையால் தகுதியும், திறமையும் கொண்ட மாணவர்கள் கூட ஏனோதானோ கல்லூரியில் சேர்ந்து பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்ள மட்டுமே உதவக் கூடிய பட்டங்களுடன் வெளியே வருகின்றனர்.
அத்துடன், கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு நிகராக கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பொறியியல் கல்லூரிகளில் சிறந்து விளங்கும் கல்லூரிகளில் எப்படி முன்கூட்டியே இடங்களைப் பிடித்துக் கொள்ளும் முறை இருந்ததோ அதைப் போலவே, முக்கியமான கலை, அறிவியல் கல்லூரிகளில் இடங்களைப் பிடிப்பதற்கு வசதியுள்ள பெற்றோர்கள் முனைப்புக் காட்டுகின்றனர்.
நான்கு ஆண்டு பொறியியல் படித்து வெளியேறும் மாணவர்களுக்கு நிகராகவே மூன்றே ஆண்டில் கலை, அறிவியல் படிப்பு படித்து வெளியே வரும் மாணவர்கள் அதிகம் சம்பாதிப்பதால் பி.காம்., பி.காம் சி.ஏ., பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், பி.ஏ. ஆங்கிலம் உள்ளிட்ட படிப்புகளில் சேர போட்டா போட்டி நிலவுகிறது.
இதைப் பயன்படுத்திக் கொண்டு கலை, அறிவியல் கல்லூரிகளில் பி.இ. படிப்புக்கு நிகராக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்கிறார் கல்வியாளரும், மதிமுக மாநில இளைஞரணிச் செயலருமான வே.ஈஸ்வரன். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு படிப்பு மதிப்பு மிக்கதாகக் கருதப்படும். அப்போது அந்தப் படிப்புகளுக்கான கட்டணம் திடீரென ஆயிரங்களில் இருந்து லட்சங்களாக உயரும்.
அதைப் போலதான் கல்வி நிறுவனங்கள் நிறைந்த கோவையில் சில கல்லூரிகளில் வணிகவியல் படிப்புகளுக்காக ரூ.3 லட்சம் வரை நன்கொடையும், ஒரு பருவத்துக்கு ரூ.55 ஆயிரம் வரை கல்விக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்ற முறைகேடுகளுக்கு முடிவு கட்டுவதற்காகத்தான் கலை, அறிவியல் மாணவர் சேர்க்கைக்கும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த வேண்டும் என்று கோரி கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம் என்கிறார் ஈஸ்வரன்.
முதலில் ஏதேனும் ஒரு கல்லூரியில் சேரும் மாணவர்கள் பிறகு, தான் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைத்துச் செல்லும்போது, முன்னர் சேர்ந்த கல்லூரியில் கட்டிய பணத்தைத் திரும்பப் பெற முடிவதில்லை. மேலும், சில கல்லூரிகள் 3 ஆண்டுக்குரிய பணத்தை செலுத்தினால் மட்டுமே சான்றிதழ்களை வழங்குகின்றன.
தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் எல்.கே.ஜி.யில் சேரும் மாணவர்களுக்கும், பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் நிலையில், கலை, அறிவியல் படிப்புகளுக்கு மட்டும் நடத்தாமல் இருப்பதன் பின்னணியில் தனியார் கல்லூரிகளின் அழுத்தம் உள்ளது.
கேரளம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் இந்த முறையில் மாணவர் சேர்க்கை எந்தவித பிரச்னையும் இல்லாமல் நடத்தப்பட்டு வருவதால் இந்த ஆண்டே தமிழகத்திலும் அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் அவர்.
பல்கலைக்கழகங்கள் அளவிலாவது நடைமுறைப்படுத்த வேண்டும்: கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற உயர் கல்வி மன்றம் ஏற்றுக் கொண்ட இந்தக் கோரிக்கையை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே வலியுறுத்தி வருவதாகக் கூறுகிறார் தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் என்.பசுபதி.
தமிழகத்தில் உள்ள 70-க்கும் மேற்பட்ட அரசுக் கலைக் கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும், 130-க்கும் மேற்பட்ட உதவி பெறும் கல்லூரிகளில் 90 சதவீத இடங்களும், 400-க்கும் மேற்பட்ட சுயநிதி கல்லூரிகளில் 50 சதவீத இடங்களும் மாணவர்கள் பிளஸ் 2-வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலும், இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் மட்டுமே நிரப்பப்பட வேண்டும்.
தேர்வு முடிவு வெளியான 12 நாள்கள் கழித்தே சேர்க்கை நடைமுறைகள் தொடங்கப்பட வேண்டும். அதற்காக ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். பிறகு, விண்ணப்ப விநியோகம், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் திரும்பப் பெறுவது, மதிப்பெண் பட்டியல் தயாரிப்பது, அதை அறிவிப்புப் பலகையில் ஒட்டுவது என பல நடைமுறைகள் உள்ளன. ஆனால் அவை ஏட்டளவிலேயே உள்ளன.
அதற்கு பதிலாக பிளஸ் 2 தேர்வு முடிவு வந்த சில மணி நேரங்களிலேயே மேற்கண்ட இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நிறைவடைந்துவிடுகிறது. இவ்வாறு மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியில் உள்ள கல்லூரியிலும் ஒவ்வொரு மாதிரியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதைவிடக் கொடுமையான விஷயம் என்னவென்றால், நல்ல மதிப்பெண் கொண்ட கிராமப்புற ஏழை மாணவருக்குத் தரமான கல்லூரியில் இடம் கிடைக்கும் வாய்ப்பு தட்டிப் பறிக்கப்படுகிறது.
இதைவிட முக்கியமானது பல தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக இருப்பதால் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களும், படிக்கும் மாணவர்களுமே இடைத்தரகர்களாக மாறி, கல்லூரிகளுக்கு மாணவர்களை அழைத்து வந்து சேர்த்துவிட்டு அவற்றுக்குத் தரகு கூலி பெற்றுக் கொள்கின்றனர்.
தற்போதைய நடைமுறைப்படி ஒரு மாணவர் குறைந்தபட்சம் 5 கல்லூரிகளிலாவது கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களைப் பெறுகிறார். பின்னர் விண்ணப்பத்துடன் கேட்பு வரைவோலையை செலுத்தி விண்ணப்பிக்கிறார். ஒருவேளை இடம் கிடைக்காவிட்டால் அவருக்கு நஷ்டம்தான்.
இதற்கு பதிலாக அனைத்து கலை, அறிவியல் படிப்புகளிலும் சேருவதற்கு ஆன்லைனில் ஒரே விண்ணப்பத்தை அனுப்பி, அதற்கு மாநில அளவிலான தரவரிசைப் பட்டியல் தயாரித்து, அதன்படி தகுதியானவருக்குத் தகுதியான கல்லூரியில் இடம் வழங்கப்பட வேண்டும். மாநில அளவிலோ, மண்டல அளவிலோ மாணவர் சேர்க்கையை நடத்துவதில் சிரமங்கள் இருப்பதாகக் கருதினால் முதல்கட்டமாக பல்கலைக்கழங்கள் அளவிலாவது இந்த முறையை அமல்படுத்த வேண்டும். ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கையை நடத்துவது ஒன்றே, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஏழை மாணவர்களுக்கும் இடம் கிடைப்பதை சாத்தியப்படுத்தும் என்றார் அவர்.
தற்போதைக்கு இல்லை: ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கைக்கு தொடர்ந்து கோரிக்கை எழுந்து வரும் நிலையில், இதை நடைமுறைப்படுத்துவது குறித்து அனைத்து கல்லூரி முதல்வர்கள், மண்டல இணை இயக்குநர்கள் தங்கள் கருத்தைக் கூறலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் கடந்த ஆண்டு சுற்றறிக்கை அனுப்பியது. ஆனால், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இயக்குநரகம் இதுவரை தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே, கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஒற்றைச் சாளர முறையை அமல்படுத்துவது குறித்து இதுவரை கொள்கை அடிப்படையில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ள உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் சுனில் பாலிவால், கல்லூரிக் கல்வி இயக்குநரகத்திடமிருந்து கூட அதுபோன்ற பரிந்துரை எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com