புதிய நடைமுறையால் காற்றாலை மின்உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்படும்

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய நடைமுறையால் புதிய காற்றாலை மின்னுற்பத்தி நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என அகில இந்திய காற்றாலை மின்னுற்பத்தி சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய நடைமுறையால் புதிய காற்றாலை மின்னுற்பத்தி நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என அகில இந்திய காற்றாலை மின்னுற்பத்தி சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் அமைத்துள்ள காற்றாலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மின் வாரியம் வாங்குகிறது. இதற்கான கட்டணத்தை மின்சார ஒழுங்கு முறை ஆணையம், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்கிறது. தற்போது ஒரு யூனிட் காற்றாலை மின்சாரம் ரூ. 4.16 -க்கு வாங்கப்படுகிறது. இக்கட்டணம் தற்போது ரூ.2.86 ஆகக் குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணம் 2020-வரை நடைமுறையில் இருக்கும். இந்நிலையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி வந்த பேங்கிங் என்ற முறையை ரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளது. இதனால் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்படும் என அகில இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கஸ்தூரி ரங்கையன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: உற்பத்தி செய்யப்படும் காற்றாலை மின்சாரத்தை தொழிற்சாலைகளுக்கும் அந்தந்த நிறுவனங்களும் பயன்படுத்துகின்றன. மே முதல் செப்டம்பர் வரைதான் காற்றாலைகளில் அதிக மின்சாரம் கிடைக்கிறது. உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆண்டு முழுவதும் மின்சாரம் தேவைப்படுவதால் சீசன் காலத்தில் காற்றாலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் தேவை போக உபரியாக உள்ளதை மின்வாரியத்திடம் யூனிட் அடிப்படையில் தரப்படுகிறது. அதை மின் வாரியம் வாங்கி கணக்கில் வைக்கிறது.
சீசன் இல்லாத போது காற்றாலை உற்பத்தியாளர்கள் தங்கள் ஆலைகளுக்கு, மின் வாரியம் வழங்கும் மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். இதற்கு கட்டணம் தருவதற்கு பதில் சீசன் காலத்தில் மின் வாரியத்திடம் வரவு வைத்த உபரி காற்றாலை மின்சாரத்தில் இருந்து கழித்து கொள்கின்றனர். அவ்வாறு காற்றாலை உற்பத்தியாளர்கள் வழங்கிய மின்சாரத்தைத் திருப்பித் தரும்போது மின் வாரியம் முழுவதுமாக தராமல் குறிப்பிட்ட யூனிட்களை பிடித்தம் செய்கிறது. பிடித்தம் செய்யப்பட்டுள்ள மின்சாரத்தை ஆண்டு முழுவதும் தேவைப்படும் நாளில் காற்றாலைகளால் பெற முடியும். அப்போது மின்வாரியத்தில் போதுமான உற்பத்தி இல்லாவிட்டாலும் வெளியில் கூடுதல் விலைக்கு வாங்கியாவது காற்றாலைகளுக்கு மின் விநியோகம் செய்ய வேண்டும். இதற்கு பேங்கிங் என்று பெயர். இந்தச் சலுகையால் தங்களுக்கு இழப்பு ஏற்படுவதாக கூறி அதை ரத்து செய்யுமாறு மின் வாரியம், ஒழுங்குமுறை ஆணையத்திடம் வலியுறுத்தியது.
பேங்கிங் சலுகையால்தான் பல நிறுவனங்களும் காற்றாலைகளில் முதலீடு செய்துள்ளன. அதை ரத்து செய்தால் முதலீடு செய்தவர்கள் பாதிக்கப்படுவர். மேலும் புதிய முதலீடும் வராது. இதனால் தொழில்துறை உள்பட பல துறைகள் பாதிக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com