வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவை 9 வது அட்டவணையில் சேர்க்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவை 9 வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவை 9 வது அட்டவணையில் சேர்க்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவை 9 வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் தீர்ப்புக்கு எதிராக, அனைத்து கட்சிகளின் சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின்,
காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்தும் வகையில், வைகோவின் மைத்துனர் மகன் சரவணன் சுரேஷ், கடந்த 13 ஆம் தேதியன்று அதிகாலையில் நடைபயிற்சி சென்றபோது தீக்குளித்து, பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பயனின்றி கொடுமையான முறையில் இறந்துவிட்ட துயரச்செய்தியை அனைவரும் அறிந்திருப்பீர்கள். அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைவரும் இரண்டு நிமிடங்கள் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் வகையில் தீர்ப்பு வந்திருப்பதை கண்டித்து நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இந்த ஆட்சியில் பல கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவரையும் இந்த வெயிலின் கொடுமையில் அதிக நேரம் நிற்க வைக்க விரும்பவில்லை என்பதால், அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் சுருக்கமாக எனது உரையை முடிக்க விரும்புகிறேன். குறிப்பாக, வைகோ எப்படிப்பட்டதொரு சூழ்நிலையில் இந்த ஆர்ப்பட்டத்தில் பங்கேற்று இருக்கிறார் என்பதில் இருந்தே, இதன் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து கொள்ள முடியும். நேற்று, அண்ணன் வைகோவை நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவருக்கு ஆறுதல் தெரிவித்தபோது, “நாளை காலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதோடு, மாலையில் அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்டியிருக்கிறோம். நீங்கள் வந்து பங்கேற்க வேண்டுமென்று கட்டாயமில்லை. உங்கள் கட்சியின் சார்பில் ஒரு பிரதிநிதியை அனுப்பி வைத்தால் போதும்”, என்று எடுத்துச் சொன்னேன். ஆனால், “நான் உறுதியாக நாளை வந்து பங்கேற்பேன். இது சாதாரணமானதொரு பிரச்னையல்ல. அதற்கொரு முடிவு கட்ட வேண்டும். எனவே, என்னதான் துக்கத்தில் இருந்தாலும், துயரத்தில் இருந்தாலும், இந்த ஆர்ப்பாட்டத்தை முனைப்புடன் நடத்த நான் வருவேன். அனைத்து கட்சிகள் கூட்டத்திலும் பங்கேற்பேன்”, என்று தெரிவித்தார்.

சமூகநீதிக்காகவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்காகவும், அரசியல் சட்டத்தின் நோக்கத்தை பட்டுப்போகாமல் தடுத்து நிறுத்துவதற்கும் நாம் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டக்களமாக இருக்கும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில், நாம் பெருமையோடு சொல்ல வேண்டுமென்றால், தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த நேரத்தில் அனைத்து சாதிகளை சேர்ந்தவர்களும் ஆலங்களுக்குள் நுழையலாம், அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தார். தலைவர் கருணாநிதி ஆட்சிகாலத்தில், 1969-71 ஆம் ஆண்டுகளில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு இலவச காங்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட்டன. அதுமட்டுமல்ல, தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 16% லிருந்து 18% ஆக உயர்த்தப்பட்டதும் தலைவர் கருணாநிதியின் ஆட்சியில் தான்.

இன்னும் பெருமையோடு சொல்ல வேண்டுமென்றால், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண் மாநகராட்சி மேயராகும் வாய்ப்பும், தலைவர் கருணாநிதியின் ஆட்சியில் தான் உருவாக்கப்பட்டது. எல்லா மதங்களை சேர்ந்தவர்களும் ஒன்றிணைந்து, ஒற்றுமை உணர்வோடு வாழ வேண்டுமென்பதற்காக, தமிழகம் முழுவதும் 150 இடங்களில் தந்தை பெரியாரின் பெயரில் சமத்துவபுரங்கள் தொடங்கப்பட்டதும் தலைவர் கருணாநிதி ஆட்சியில் தான் என்பதை பெருமையோடு நான் தெரிவிக்க விரும்புகிறேன். அப்படிப்பட்ட உரிமைகளோடு தான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், உங்களோடு சேர்ந்து பங்கேற்க நாங்கள் வந்திருக்கிறோம்.

இன்றைக்கு பாஜக ஆட்சி மத்திய அரசில் பொறுப்பேற்ற பிறகு, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாநிலத்திலும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இதுதான் மோடி தலைமையிலான மத்திய அரசின் மிகப்பெரிய சாதனையாக உள்ளது. தற்போது, உச்ச நீதிமன்றம் இப்படிப்பட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறது என்றால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு ஒரு சீராய்வு மனுவை உடனடியாக தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், வட மாநிலங்களில் ஏற்பட்டிருக்கின்ற போராட்டங்களை எல்லாம் பார்த்த பிறகு, வேறு வழியின்றி சீராய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு முன் வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. உள்ளபடியே நமக்கு காவிரிப் பிரச்னை மட்டும் இல்லையென்றால், இந்தத் தீர்ப்பு வந்தபோது இந்தத் தீர்ப்பு வெளியானதும் தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய கிளர்ச்சி ஏற்பட்டிருக்கும். காவிரிப் பிரச்னையால், கொஞ்சம் காலதாமதமாக வியூகம் அமைத்து இந்தப் போராட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.

எனவே, நான் நிறைவாக சொல்ல விரும்புவது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை உடனே அமுல்படுத்த வேண்டுமென்று நாம் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், இன்றைக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு மிகப்பெரிய கொடுமையாக அதே உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கின்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அல்லது 9 வது அட்டவணையில் இதனை சேர்த்து, ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இல்லையென்றால், இந்தப் போராட்டம் இன்றோடு முடியாமல், மேலும் தொடரும் என்பதை மட்டும் எடுத்துச் சொல்லி, உரையை நிறைவு செய்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com