அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி அமைத்ததே காங்கிரஸ்தான்: முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே

அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி அமைத்ததே காங்கிரஸ்தான் என்று தமிழக முன்னாள் அமைச்சரும், பாஜக பிரமுகருமான எச்.வி.ஹண்டே தெரிவித்தார்.
அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி அமைத்ததே காங்கிரஸ்தான்: முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே

அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி அமைத்ததே காங்கிரஸ்தான் என்று தமிழக முன்னாள் அமைச்சரும், பாஜக பிரமுகருமான எச்.வி.ஹண்டே தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் தினமணி நிருபரிடம் கூறியது: அம்பேத்கர் வகுத்தளித்த அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தினால், நாடெங்கும் போராட்டம் வெடிக்கும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஆனால், அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தியமைத்தது மட்டுமல்லாது சீர்குலைத்ததே காங்கிரஸ்தான் என்பது ராகுல் காந்திக்கு தெரியாது. பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அரசியலமைப்புச் சட்டத்தை காங்கிரஸ் அரசு சீர்குலைத்தது குறித்து நூல் எழுதி வெளியிட்டுள்ளேன். 
'அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தியமைப்போம்' என்று மத்திய இணையமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே கூறியிருந்ததில் தவறொன்றுமில்லை. அவருக்கு அதை எப்படி கூறுவது என்பது தெரியவில்லை. அம்பேத்கர் வகுத்து தந்த அரசியலமைப்புச் சட்டத்தைச் சீர்குலைத்ததே காங்கிரஸ் என்றும் அதை சீரமைத்து மீண்டும் அம்பேத்கரின் அரசியலமைப்புச்சட்டமாக்குவோம் என்றும் அவர் கூறியிருக்க வேண்டும். 1976-ஆம் ஆண்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, 42-ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தின் உள்ளடக்கத்தை மாற்றி அமைத்துவிட்டார். இந்த ஒரு திருத்தத்தின் மூலம் 52 இடங்களில் திருத்தங்களைக் கொண்டுவந்தார். 
அரசியலமைப்புச்சட்டத்தின்முன்னுரையை மாற்றிய இந்திரா காந்தி, அதில் சோஷலிச, மதசார்பற்ற என்ற இரு வார்த்தைகளைத் திணித்தார். அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்தபோதே சோஷலிச, மதசார்பற்ற என்ற வார்த்தைகளைத் தெரிந்தே தவிர்ப்பதாக அம்பேத்கர் அறிவித்திருந்தார். 
இந்தியாவில் சோஷலிசம் தழைக்குமா? என்பது கேள்விக்குறி என்பதால் அதை தவிர்ப்பதாக அம்பேத்கர் விளக்கம் அளித்தார். தற்போது நாம் பின்பற்றும் அரசியலமைப்புச் சட்டம் அம்பேத்கர் வகுத்தளித்த வடிவத்தில் இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும். 42-ஆவது சட்டத் திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்துக்கான மரண அடியாகும். இதைத் தொடர்ந்து, அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டப்பிரிவு-368-ஐயும் இந்திரா காந்தி மாற்றினார். 
அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான நடைமுறைகள் என்று அம்பேத்கர் தலைப்பிட்டிருந்ததை, இந்திரா காந்தி அரசியலமைப்புச்சட்டத்தை திருத்துவதற்கான நாடாளுமன்றத்தின் அதிகாரம் என்று மாற்றினார். 
இப்படி பல மாற்றங்களை செய்து, அம்பேத்கர் வகுத்தளித்த அரசியலமைப்புச்சட்டம் சீர்குலைந்து, உருக்குலைந்துள்ளது. இதை மறுபடியும் பழையநிலைக்கு கொண்டுவர வேண்டும். இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறேன் என்றார் ஹண்டே.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com