ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.16 லட்சம் திருட்டு: பணம் நிரப்பும் ஊழியர் கைது

கள்ளக்குறிச்சி அருகே ஏடிஎம் இயந்திரத்திலிருந்து ரூ.16 லட்சத்து 24 ஆயிரம் வரை திருடி விட்டு, அந்த இயந்திரத்தையே தீயிட்டு எரித்த பணம் நிரப்பும் ஊழியரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.16 லட்சம் திருட்டு: பணம் நிரப்பும் ஊழியர் கைது

கள்ளக்குறிச்சி அருகே ஏடிஎம் இயந்திரத்திலிருந்து ரூ.16 லட்சத்து 24 ஆயிரம் வரை திருடி விட்டு, அந்த இயந்திரத்தையே தீயிட்டு எரித்த பணம் நிரப்பும் ஊழியரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியை அடுத்த நைனார்பாளையத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. அந்த மையத்திலிருந்த ஏடிஎம் இயந்திரம் தீப்பற்றி எரிவதாக வங்கியின் கிளை மேலாளர் செ.ராமராஜுக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அவர், மண்டல மேலாளர் ஹரிதாஸுடன் சென்று ஏடிஎம் இயந்திரத்தை பார்வையிட்டார். அப்போது, ஏடிஎம் மையத்தின் குளிர்சாதன இயந்திரம், ரூபாய் நோட்டுகள் அடுக்கி வைக்கப்படும் இயந்திரம் ஆகியவை எரிந்து சேதமாகிக் கிடந்தன.
பணம் நிரப்பும் ஏஜென்சி ஊழியர்கள் சிவக்குமார், பாபு, சங்கர் உள்ளிட்டோர் வரவழைக்கப்பட்டு, அந்த ஏடிஎம் இயந்திரம் திறந்து பார்த்து தொகை சரிபார்க்கப்பட்டது. அப்போது, அந்த இயந்திரத்தில் இருக்க வேண்டிய தொகையிலிருந்து ரூ.16,24,300 அளவுக்கு குறைவாக இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வங்கியின் கிளை மேலாளர் செ.ராமராஜ் கீழ்க்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் நடத்திய விசாரணையில், பணம் நிரப்பும் ஊழியரான சின்னசேலம் பவர் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த பாபு (43), ஏடிஎம் இயந்திரத்தில் ஒவ்வொரு முறையும் பணம் நிரப்பும் போதும் சிறிது, சிறிதாக ரூ.16 லட்சத்து 24 ஆயிரம் வரை திருடியதுடன், தணிக்கையில் சிக்காமல் இருப்பதற்காக அந்த இயந்திரத்தையே தீயிட்டு எரித்தது தெரிய வந்தது. இதையடுத்து பாபுவை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்து, அவரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். 
இந்த சம்பவம் குறித்து அறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கீழ்க்குப்பம் காவல் நிலையத்துக்கு நேரில் வந்து பாபுவிடம் விசாரணை செய்து, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பார்வையிட்டார். அப்போது, கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் வி.கோமதி உடனிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com