காவிரி: 23-இல் மனிதச் சங்கிலிப் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக மாவட்டத் தலைநகரங்களில் வரும் 23-ஆம் தேதி மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் பிறகு
காவிரி: 23-இல் மனிதச் சங்கிலிப் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக மாவட்டத் தலைநகரங்களில் வரும் 23-ஆம் தேதி மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் பிறகு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை மாலை அனைத்துக் கட்சி கூட்டம் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பு மத்திய அரசால் 2013 பிப்ரவரி 19-இல் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன் மூலம் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு முழுமையான தகுதி வந்து விடுகிறது என்று மாநிலங்களுக்கு இடையிலான 1956-ஆம் ஆண்டு நதி நீர் தாவா சட்டப் பிரிவு 6 (2) மிகத் தெளிவாகக் கூறியுள்ளது.
நடுவர் மன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுவர் மன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டதாக, தன்னுடைய தீர்ப்பில் கூறியுள்ள உச்ச நீதிமன்றம், 14.75 டி.எம்.சி. தண்ணீர் அளவைக் குறைத்ததுடன், அத்தீர்ப்பில் இடம் பெற்றுள்ள காவிரி மேலாண்மை வாரியம் குறித்து எதுவும் சொல்லாமல், பொதுப்படையாக 'ஸ்கீம்' (செயல் திட்டம்) உருவாக்க வேண்டும் என்று சொல்லியிருப்பது தமிழகத்துக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனைக் கருத்தில் கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே தீர்வு என்ற வகையில், அதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
திட்டம் என்பதற்கு விளக்கம் கேட்டு மனுதாக்கல் செய்திருக்கும் மத்திய அரசின் உள்நோக்கம் கொண்ட ஏமாற்று வேலைகளை எல்லாம் கண்டும் காணாமல் அதிமுக அரசு மெளனமாக இருக்கிறது. 
இந்நிலையில் அடுத்த கட்டப் போராட்டத்தைத் துவக்குவது என கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது. 
இதன்படி, அனைத்துக் கட்சிகளின் சார்பில் வரும் 23-ஆம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறும்.
ஆளுநர் நடவடிக்கை தேவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பிரதமரைச் சந்திக்க முயற்சி: காவிரி மேலாண்மை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்கு அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பிரதமரிடம் முதல்வர் நேரம் கேட்கவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளிப்படையாகவே குற்றம்சாட்டியுள்ளார். இதனை முதல்வர் மறுக்கவும் இல்லை. 
இந்நிலையில், பிரதமரை நேரில் சந்திப்பதற்கான உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென மு.க.ஸ்டாலினை அனைத்துக் கட்சித் தலைவர் கூட்டம் வலியுறுத்துகிறது என்பது உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியது: கல்லூரி மாணவிகளிடம் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி தவறான வழிக்கு அழைத்துச் செல்லும் வகையில் பேசியது தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையிடம் அரசியல்வாதிகள் பணம் பெற்றதாகக் கூறுபவர்கள், அந்த அரசியல்வாதிகள் யார் யார் என்ற பட்டியலையும் வெளியிட வேண்டும் என்றார்.
திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் உள்ளிட்ட தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com