ஜிப்மரில் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: ஒருவர் கைது

ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதாக ரூ.11 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக தனியார் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதாக ரூ.11 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக தனியார் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
புதுவை லாஸ்பேட்டை அசோக் நகரைச் சேர்ந்தவர் சாய்பாபா (53). இவர், சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். 
கடந்த 2015-ஆம் ஆண்டு இவருடைய மகள் சகஸ்ரசித்தாவுக்கு ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். சீட்டுக்காக அலைந்து கொண்டிருந்தார். 
இதை அறிந்த, புதுச்சேரி காமராஜர் சாலையில் தனியார் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனம் நடத்தி வரும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (54) என்பவர் சாய்பாபாவிடம் ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். சீட்டு வாங்கித் தருவதாக கூறினார். 
அதற்காக அவரிடம் ரூ.25 லட்சம் கேட்டிருந்தார். அதைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தியிடம் சாய்பாபா ரூ.11 லட்சத்தை வழங்கினார். மீதமுள்ள தொகையை சீட்டு வாங்கித் தந்த பிறகு கொடுப்பதாகக் கூறினார்.
ஆனால், கிருஷ்ணமூர்த்தி சொன்னபடி எம்.பி.பி.எஸ். சீட்டு வாங்கித் தரவில்லை. அடுத்த ஆண்டில் சீட்டு வாங்கித் தருவதாக உறுதியளித்தார். இதையடுத்து, சாய்பாபுவும் ஓராண்டு காத்திருந்தார். ஆனால் இந்த முறையும் சீட்டு வாங்கித் தரவில்லை. 
அதையடுத்து சாய்பாபா தான் கொடுத்த பணத்தை திரும்பித் தரும்படி கேட்டார். கிருஷ்ணமூர்த்தி பணத்தை தருவதாகக் கூறி இழுத்தடித்து வந்தார். இதற்கிடையே, கிருஷ்ணமூர்த்தி தான் நடத்தி வரும் நிறுவனத்தை மூடிவிட்டு தப்பிவிட்டார். 
இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய தொடர்ந்து முயற்சி செய்தனர். அதன்படி, அவரது செல்லிடப்பேசிக்கு தொடர்பு கொண்டு எம்.பி.பி.எஸ். சீட்டு வாங்கித் தரும்படி கேட்டனர்.
இதை உண்மை என நம்பி கிருஷ்ணமூர்த்தி புதுச்சேரிக்கு திங்கள்கிழமை வந்தார். அப்போது அவரை போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com