மூக்கையூர், குந்துகால் துறைமுக கட்டுமானப் பணி: மத்திய அரசு உயரதிகாரிகள் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் மூக்கையூர் துறைமுகம், பாம்பன் குந்துகால் மீன்கள் இறக்கு தளம் அமைய உள்ள இடங்களை, மத்திய அரசின் இணைச் செயலர்கள் குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மூக்கையூர் மீன்பிடித் துறைமுகம் மற்றும் பாம்பன் குந்துகால் பகுதிகளில் திங்கள்கிழமை ஆய்வு செய்த மத்திய அரசின் இணைச் செயலர் குழுவினர்.
ராமநாதபுரம் மாவட்டம், மூக்கையூர் மீன்பிடித் துறைமுகம் மற்றும் பாம்பன் குந்துகால் பகுதிகளில் திங்கள்கிழமை ஆய்வு செய்த மத்திய அரசின் இணைச் செயலர் குழுவினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மூக்கையூர் துறைமுகம், பாம்பன் குந்துகால் மீன்கள் இறக்கு தளம் அமைய உள்ள இடங்களை, மத்திய அரசின் இணைச் செயலர்கள் குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
சாயல்குடி அருகேயுள்ள மூக்கையூர் கடல் பகுதியில் ரூ.113.90 கோடி மதிப்பில் 250 விசைப் படகுகள் மற்றும் 200 நாட்டுப் படகுகள் நிறுத்தும் வகையிலும், மீன் ஏலக் கூடம், மீன்களை காய வைப்பதற்கான தளம், வலை பின்னும் கூடம், மீனவர்கள் ஓய்வறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 
இதேபோன்று, பாம்பன் குந்துகால் பகுதியில் ரூ.70 கோடி மதிப்பில் மீன்கள் இறக்கு தளம் அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 
இந்த இரு இடங்களிலும் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்ய, மத்திய அரசின் இணைச் செயலர்களான சஞ்சய் பாண்டா (மத்திய வெளியுறவுத் துறை), பிரஜேந்திரா நவநீத் (பிரதமர் அலுவலகம்), ரமேஷ்குமார் (மத்திய கால்நடைப் பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை) ஆகியோர் அடங்கிய குழுவினர், திங்கள்கிழமை ராமநாதபுரம் வருகை தந்தனர்.
இந்தக் குழுவினருடன், தமிழக அரசு முதன்மைச் செயலர் (கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை) மு. கோபால் மீன்வளத் துறை இயக்குநர் ஜி.எஸ். சமீரன், மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் ஆகியோர், சாயல்குடி அருகேயுள்ள மூக்கையூர் பகுதியில் நடைபெற்று வரும் மீன்பிடித் துறைமுகக் கட்டுமானப் பணிகளின் நிலை குறித்தும், தங்கச்சிமடம் அருகே பாம்பன் குந்துகால் பகுதியில் அமைக்கப்படவுள்ள மீன்கள் இறக்கு தளத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்துக்கும் சென்று களஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலர் (கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை) மு. கோபால் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
மூக்கையூர் மீன்பிடி துறைமுகத்துக்கான கட்டுமானப் பணிகள் தற்போது வரை 67 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகளை துரிதமாக மேற்கொண்டு 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் முடித்திட வேண்டும் என, அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், குந்துகால் பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ள மீன்கள் இறக்கு தளத்தினை, சிறு துறைமுகமாகக் கட்டமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு, காலதாமதமின்றி மீனவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இது தவிர, ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்குவித்திடும் வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த சுமார் 500 மீனவர்களுக்கு மத்திய அரசு மானியத்துடன் ரூ. 80 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கான கட்டுமானப் பணிகள், கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் துறையில் நடைபெற்று வருகிறது என்றார்.
இதைத் தொடர்ந்து, மண்டபத்திலுள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய கூட்டரங்கில், மத்திய அரசு குழுவினர் மற்றும் தமிழக அரசு முதன்மைச் செயலர், மீன்வளத் துறை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மீனவர்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களது குறைகளைக் கேட்டறிந்தனர். கூட்டத்தில், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com