வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை 9 -ஆவது அட்டவணையில் சேர்க்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியலமைப்பின் 9 -ஆவது அட்டவணையில் சேர்த்து தலித் மக்களுக்குச் சட்டப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் 
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் 

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியலமைப்பின் 9 -ஆவது அட்டவணையில் சேர்த்து தலித் மக்களுக்குச் சட்டப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்திருப்பதாகவும், அதற்கு மத்திய அரசு துணையாக இருப்பதாகவும் கூறி ,திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்து மு.க.ஸ்டாலின் பேசியது:
அரசியல் சட்டத்தின் நோக்கத்தைப் பட்டுப்போகாமல் தடுத்து நிறுத்துவதற்காக இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். வன்கொடுமை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது என்றால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு ஒரு சீராய்வு மனுவை உடனடியாக தாக்கல் செய்திருக்க வேண்டும். 
ஆனால், வட மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் போராட்டங்களை எல்லாம் பார்த்த பிறகு, வேறு வழியின்றி சீராய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு முன் வந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 
காவிரிப் பிரச்னை மட்டும் இல்லையென்றால், வன்கொடுமைக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தவுடனேயே தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய கிளர்ச்சி ஏற்பட்டிருக்கும். காவிரிப் பிரச்னையால், கொஞ்சம் காலதாமதமாக வியூகம் அமைத்து இந்தப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம்.
எனவே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். வன்கொடுமைச் சட்டத்தினை அரசியலமைப்புச் சட்டத்தின் 9 -ஆவது அட்டவணையில் சேர்த்து, தலித் சமுதாய மக்களுக்கு ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றார் அவர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சட்டப்பேரவைக் காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவர் கே.எம்.காதர்மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மத்திய அரசு நீர்த்துப் போகச் செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டி பேசினர்.
மாநிலங்களவைத் திமுக குழுத் தலைவர் கனிமொழி, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார், கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்பட பல்வேறு கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்று,மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
மெளன அஞ்சலி: 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என்று வலியுறுத்தி தீக்குளித்த, வைகோவின் மைத்துனர் மகன் சரவணன் சுரேஷ் மறைவுக்கு ஆர்ப்பாட்டத்தில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com