தமிழகத்தில் 2025-க்கு முன் காசநோய் ஒழிக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்தியாவில் வரும் 2025-ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே காச நோயை முற்றிலும் ஒழிக்கும் முதல் மாநிலமாகத் தமிழகம் திகழும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பன்மருந்து எதிர்ப்பு காசநோய்க்கான மாத்திரைகளை நோயாளிக்கு வழங்குகிறார் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். 
தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பன்மருந்து எதிர்ப்பு காசநோய்க்கான மாத்திரைகளை நோயாளிக்கு வழங்குகிறார் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். 

இந்தியாவில் வரும் 2025-ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே காச நோயை முற்றிலும் ஒழிக்கும் முதல் மாநிலமாகத் தமிழகம் திகழும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
தாம்பரம் சானடோரியம் அரசு காச நோய் மருத்துவமனையில் பன்மருந்து எதிர்ப்பு காசநோய்க்கான குறுகிய கால சிகிச்சை முறை அறிமுக விழா மற்றும் காசநோயைக் கண்டறிவதற்கான எக்ஸ்ரே கருவியுடன் கூடிய நடமாடும் மருத்துவ வாகனத்தின் செயல்பாட்டைத் தொடங்கி வைக்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில் விஜயபாஸ்கர் பேசியது: காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் குணமாக 18 முதல் 24 மாதங்கள் வரை மருந்து சாப்பிடும் நிலை முன்பு இருந்தது. ஆனால், தற்போது 9 முதல் 12 மாதங்களுக்குள் குணப்படுத்தக்கூடிய குறுகிய கால சிகிச்சை முறை கண்டறியப்பட்டு தற்போது சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் காச நோயாளிகளுக்கான மாத்திரைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. 
நடமாடும் மருத்துவப் பரிசோதனை வாகனம்: வீடு தேடிச் சென்று உரிய மருத்துவப் பரிசோதனை மூலம் காச நோயாளிகளைக் கண்டறிவதற்கான நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே வசதியுடன் கூடிய நடமாடும் மருத்துவப் பரிசோதனை வாகனம் ரோட்டரி சங்க உதவியுடன் செயல்பட உள்ளது. இந்த வாகனம் பொதுமக்களை வீடு தேடிச் சென்று, அங்கேயே எக்ஸ்ரே, சளிப் பரிசோதனை மேற்கொள்ள வசதி உள்ளது. அப்போது பரிசோதிக்கப்படும் நபருக்குக் காசநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால், சிகிச்சை மேற்பார்வையாளர் மூலம் பரிசோதனை முடிவுகள் பயனாளிகளுக்கு அவர்களது இல்லங்களிலேயே அளிக்கப்பட்டு, ரூ.2,000 மதிப்புள்ள மருந்துகள் வழங்கப்படும். 
முன்னோடித் திட்டமாக...பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் அனைத்தும் இலவசமாக அளிக்கப்படும். இந்தியாவிலேயே இது ஒரு முன்னோடித் திட்டமாக தமிழகத்தில் செயல்படுத்தப்படும். போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டது போல் காச நோயும் முற்றிலும் ஒழிக்கப்படும். ஏற்கெனவே உலக சுகாதார நிறுவனத்தின் இலக்கான 2030-ஆம் ஆண்டுக்கு முன்னதாக, மத்திய அரசின் 2025-ஆம் ஆண்டு இலக்குக்கு முன்பாகவே தமிழகத்தில் காசநோயை முற்றிலும் ஒழித்து, காசநோயில்லா மாநிலமாக மேம்படுத்தும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர். 
அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றி, திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தினார். 
பங்கேற்றோர்: உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியத் திட்ட இயக்குநர் டாக்டர் ரஞ்சனி ராமச்சந்திரன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநில காசநோய் கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் செந்தில்ராஜ், மத்திய காசநோய் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் ஸ்ரீகாந்த் திரிபாதி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா, ஸ்ரீ பெரும்புதூர் மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.பழனி, தென் சென்னை மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் சிட்லப்பாக்கம் சி.ராஜேந்திரன், ரோட்டரி சங்க நிர்வாகி டாக்டர் நிசாமுதீன் பாப்பா, தாம்பரம் நெஞ்சகநோய் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com