மன்னிப்பு ஓகே..ஆனா காரணம் சரி இல்லை: ஆளுநருக்கு பெண் பத்திரிகையாளர் பதில்! 

தனது கன்னத்தில் தட்டியதற்காக ஆளுநர் மன்னிப்பு தெரிவித்துள்ளதை ஏற்றுக் கொண்டுள்ள பெண் பத்திரிகையாளர், ஆனால் அதற்கான காரணம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு ஓகே..ஆனா காரணம் சரி இல்லை: ஆளுநருக்கு பெண் பத்திரிகையாளர் பதில்! 

சென்னை: தனது கன்னத்தில் தட்டியதற்காக ஆளுநர் மன்னிப்பு தெரிவித்துள்ளதை ஏற்றுக் கொண்டுள்ள பெண் பத்திரிகையாளர், ஆனால் அதற்கான காரணம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.

பேராசிரியை நிர்மலா தேவி கைது, காவிரி மேலாண்மை வாரியம், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில், சென்னை ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செவ்வாயன்று சந்தித்தார்.

அப்போது பேசிய ஆளுநர், நிர்மலா தேவியின் முகத்தைக்கூட இதுவரைப் பார்த்தது இல்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் அபத்தமானவை என்று விளக்கமளித்தார்.

இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பு நிறைவடையும் போது பெண் செய்தியாளர் ஒருவரின் கன்னத்தை ஆளுநர் தட்டிக் கொடுத்தார். இது குறித்து அந்த பெண் செய்தியாளர் தனது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ஆளுநரின் செய்தியாளர் சந்திப்பு நிறைவடையும் போது, நான் அவரிடம் ஒரு கேள்வியை எழுப்பினேன். அந்தக் கேள்விக்குப் பதிலாக, எனது அனுமதியின்றியே அவர் கன்னத்தில் தட்டினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பலமுறை எனது முகத்தை கழுவிவிட்டேன். இருப்பினும் அந்த உணர்வு போகவில்லை, அதிலிருந்து என்னால் வெளியில் வர முடியவில்லை. கோபமும் ஆதங்கமும் எனக்கு ஏற்பட்டது. ஆளுநர் அவர்களே... தாத்தா என்கிற முறையில் எனக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் முறையில் நீங்கள் இதைச் செய்திருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை நீங்கள் செய்தது தவறு!" என்று டுவிட்டரில் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அத்துடன் பெண் செய்தியாளரிடம் ஆளுநர் நடந்துகொண்டது குறித்து அரசியல் பிரமுகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஆளுநரை திரும்பப் பெறக் கோரி போராட்டங்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் பெண் பத்திரிகையாளர் கன்னத்தில் தட்டிய விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புதனன்று மன்னிப்புக் கோரியுள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், 'பெண் பத்திரிகையாளரை கன்னத்தில் தட்டியதற்கு மன்னிப்புக் கோருகிறேன். இதன் காரணமாக அவரது மனதின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது திறமையைப் பாராட்டும் வகையிலும் அன்பினை வெளிப்படுத்தும் வகையிலும் எனது பேத்தி போல நினைத்துத் தான் கன்னத்தில் தட்டிக் கொடுத்தேன்' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆளுநர் மன்னிப்பு தெரிவித்துள்ளதை ஏற்றுக் கொண்டுள்ள பெண் பத்திரிகையாளர், ஆனால் அதற்கான காரணம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

மாண்புமிகு ஆளுநருக்கு, உங்களது மன்னிப்பினை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதே சமயம் நான் கேட்ட கேள்விக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக நீங்கள்  நடந்து கொண்டதாக கூறுவது சரி இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com