அரசுப் பள்ளிகளில் குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை: புதிய கட்டுப்பாடு 

அரசுப் பள்ளிகளில் குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை இல்லாமல் நடைபெற்று வரும் மேல்நிலைக் கல்வி பாடப் பிரிவுகளை நீக்குமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை இல்லாமல் நடைபெற்று வரும் மேல்நிலைக் கல்வி பாடப் பிரிவுகளை நீக்குமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-அரசு, அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நிலவரப்படி உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசாணைகளை பின்பற்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப...தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின்கட்டுப்பாட்டில் ஒரு சில மாவட்டங்களில் 1 முதல் 10 வகுப்பு வரையிலும், பிளஸ் 2 வகுப்பு வரையிலும் சில அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவ்வாறு உள்ள பள்ளிகளுக்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறைந்தபட்ச ஆசிரியர்களின் விகிதங்கள் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஒரு ஆசிரியர் வாரத்துக்குக் குறைந்தபட்சம் 28 பாட வேளைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் விதி உள்ளது.
முதுநிலை ஆசிரியர்களாகப் பணியாற்றும் ஆசிரியர்கள் மேல்நிலை வகுப்புகளில் வாரத்துக்கு 28 பாடவேளைகள் போதிக்க வேண்டும். போதிய பாடவேளை இல்லாத ஆசிரியர்களை கீழ்நிலை வகுப்புகளான 9, 10-ஆம் வகுப்புகளுக்கு கற்பிக்க அறிவுறுத்த வேண்டும்.
குறைந்தபட்சம் 15 மாணவர்கள்: மாணவர் எண்ணிக்கைக்கும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது,
ஆங்கில வழிப் பிரிவுகளில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை 15-க்கும் குறைவாக இருந்தால் அந்த வகுப்பில் உள்ள மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் செயல்படும் ஆங்கில வழி பிரிவுகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நகராட்சி, மாநகராட்சி, கிராமப் பகுதி: பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளைப் பொருத்தவரை பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்சி, மாநகராட்சி பகுதியாக இருந்தால் குறைந்தபட்சம் 30 மாணவர்களும், கிராமப் பகுதியாக இருந்தால் குறைந்தபட்சம் 15 மாணவர்களும் இருக்க வேண்டும். குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப் பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு அதில் பயிலும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com