குறைந்த மாணவர்கள் உள்ள வகுப்புகளை மூடுவது கல்வி வாய்ப்புகளை பாதிக்கும்! அன்புமணி ராமதாஸ்

குறைந்த மாணவர்கள் உள்ள வகுப்புகளை மூடுவது கல்வி வாய்ப்புகளை பாதிக்கும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
குறைந்த மாணவர்கள் உள்ள வகுப்புகளை மூடுவது கல்வி வாய்ப்புகளை பாதிக்கும்! அன்புமணி ராமதாஸ்

குறைந்த மாணவர்கள் உள்ள வகுப்புகளை மூடுவது கல்வி வாய்ப்புகளை பாதிக்கும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் 30 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள மேல்நிலைப்பள்ளி வகுப்புகளை மூட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. இது ஊரக மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை பறிக்கும் வகையிலான பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் இந்த ஆணை கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழக அரசு பள்ளிகள் இப்போது எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய பிரச்னை உட்கட்டமைப்பு பற்றாக்குறையும், ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமையும் தான். அதிலும் குறிப்பாக ஆசிரியர்களைப் பொறுத்தவரை வட மாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவும் சூழலில் தென் மாவட்டங்களில்  ஆசிரியர்கள் எண்ணிக்கை தேவைக்கும் அதிகமாக உள்ளது. கூடுதலாக உள்ள ஆசிரியர்களை பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு இடமாற்றம் செய்வது; அதன்பிறகும் நிரப்பப்படாத பணியிடங்களுக்கு புதிய ஆசிரியர்களை நியமிப்பது ஆகியவற்றின் மூலம் இந்தப் பிரச்னையை சரி செய்ய முடியும். ஆனால், ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கு பதிலாக மாணவர்களை இடமாற்றம் செய்து இந்த பிரச்னைக்கு குறுக்கு வழியில் தீர்வு காண்பதற்கு பள்ளிக்கல்வித்துறை முயல்வது பாதிப்பை ஏற்படுத்தும்.

ஊரகப்பகுதிகளில் மேல்நிலை வகுப்புகளில் 30-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடப்பிரிவுகள், நகர்ப்பகுதிகளிலும், ஆங்கில வழிக் கல்வி முறையிலும்
15-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடப்பிரிவுகள் ஆகியவற்றை மூட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பரிந்துரைத்துள்ளார். இதன்மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல ஆசிரியர் பணியிடங்களை உபரியாக்கி, அவர்களை அந்த மாவட்டத்திலேயே பணியமர்த்தி ஆசிரியர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பது தான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். மேலோட்டமாகப் பார்க்கும் போது இது சிறப்பான திட்டமாகத் தோன்றினாலும்  ஊரக மாணவர்களின் கல்வி வாய்ப்பை திட்டமிட்டு பறிக்கும் செயலாகும். இதை அனுமதிக்க முடியாது.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும், கணிதப் பிரிவு, அறிவியல் பிரிவு, கணினி அறிவியல் பிரிவு, வணிகவியல் பிரிவு, தொழில்பிரிவு உள்ளிட்ட அனைத்துப் பாடப்பிரிவுகளும் இருக்க வேண்டும். அதுதான் சமமான கல்வி வாய்ப்பு ஆகும். இதற்கு மாறான எந்த நடவடிக்கையும் கல்வி வாய்ப்பை பறிக்கும் செயலாகவே பார்க்கப்பட வேண்டும். உதாரணமாக, ஊரகப் பகுதிகளில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் கணிதப் பிரிவில் 25 மாணவர்கள் மட்டுமே இருந்தால், அந்தப் பாடப்பிரிவு மூடப்பட்டு, அருகிலுள்ள பள்ளியில் அந்த மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டுமாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சராசரியாக 8 கிலோமீட்டருக்கு ஓர் அரசு மேல்நிலைப்பள்ளி மட்டுமே செயல்பட்டு வருகிறது. ஒரு பள்ளியில் போதிய எண்ணிக்கையில் மாணவர்கள் இல்லை என்பதற்காக, இருக்கும்  மாணவர்களை இன்னொரு பள்ளிக்கு மாற்றினால் அவர்கள் அதிகபட்சமாக தினமும் 16 கிலோ மீட்டர் பயணம் செய்து தான் படிக்க வேண்டும். போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் தினமும் 16 கிலோமீட்டர் பயணம் செய்து பள்ளி சென்று திரும்புவது எளிதான காரியமல்ல. இதன் காரணமாகவே பலர் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி விடும் ஆபத்துகளும் உள்ளன.

அதுமட்டுமின்றி, ஒரு ஊரக மேல்நிலைப்பள்ளியில் ஒரு பாடப்பிரியில் நடப்பாண்டில் 30 மாணவர்கள் இல்லை என்பதற்காக அந்தப் பிரிவை மூடிவிட்டால், அடுத்த ஆண்டில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்தப் பாடப்பிரிவில் சேர விரும்பினால் அரசு என்ன செய்யும்? அவர்களுக்காக புதிதாக பாடப்பிரிவை ஏற்படுத்துமா? அல்லது மூடப்பட்ட பிரிவை மீண்டும் திறக்க முடியாது  என்று கூறி அந்த மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுமா?  ஒரு பள்ளியில் ஒரு பாடப்பிரிவு மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்  அருகிலுள்ள பள்ளியில் சேர்க்கப்படுவதாக வைத்துக் கொள்வோம். அந்த பள்ளியிலும் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு மாணவர்கள் பற்றாக்குறை காரணமாக அடுத்த ஆண்டில் மூடப்பட்டு விட்டால், அங்கு பயிலும் மாணவர்கள் இன்னொரு 8 கிலோ மீட்டர் தள்ளியுள்ள பள்ளிக்கு செல்ல வேண்டுமா? இதனால் மாணவர்கள் படிப்பதை விட பயணம் செய்வதற்குத் தான் அதிக நேரத்தை செலவிட வேண்டியிருக்கும் என்பது ஒருபுறமிருக்க, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழகத்திலுள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகள் மூடப்பட்டு விடும். இதைத் தான் தமிழக அரசு விரும்புகிறதா?

மாணவர்கள் கல்விக்காக அதிக தொலைவு பயணம் செய்யக்கூடாது என்பதால் தான் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒரு தொடக்கப்பள்ளி, 3 கிலோ மீட்டருக்கு
ஒரு நடுநிலைப்பள்ளி, 5 கிலோ மீட்டருக்கு ஓர் உயர்நிலைப்பள்ளி, 8 கிலோ மீட்டருக்கு ஒரு மேல்நிலைப்பள்ளி அமைக்கப்பட வேண்டும் என்ற விதி கல்வி
வள்ளல் காமராசர் காலத்திலிருந்து கடைபிடிக்கப்படு வருகிறது. அதை சிதைக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ளும் எந்தவொரு பிற்போக்கு நடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதற்கு மாணவர்களையோ, பெற்றோரையோ, ஆசிரியர்களையோ குறைகூற முடியாது. இதற்கு முழுக்க
முழுக்க தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். கட்டமைப்பு வசதியும், கல்வித்தரமும் இல்லை என்பதால் தான் அரசு பள்ளிகளை மாணவர்கள்
புறக்கணிக்கின்றனர். சிறப்பான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, தரமான கல்வி வழங்கப்பட்டால் அரசு பள்ளிகளில் சேர்ந்து பயில மாணவர்கள்
தயாராகவே உள்ளனர். அரசுத் தரப்பில் தவறை வைத்துக் கொண்டு மாணவர்களை தண்டிக்க பள்ளிக்கல்வித்துறை துடிப்பது முறையல்ல.

எனவே, இதுகுறித்த பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் சுற்றறிக்கை உடனடியாக திரும்பப்பெறப்பட  வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளிலும், அனைத்து பாடப்பிரிவுகளும் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடக்க தமிழக அரசு வகை செய்ய வேண்டும். அவற்றுக்கெல்லாம் மேலாக கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறையை சரி செய்து அரசு பள்ளிகள் 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்தவாறு கல்வியில் சிறந்து விளங்குவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com