தொலைநிலைக் கல்வி: 3 பல்கலைக்கழகங்கள் மட்டுமே நடத்த முடியும்

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) புதிய விதிகளின்படி, தமிழகத்தில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே 2018-ஆம் ஆண்டில் தொலைநிலைக் கல்வியை நடத்த முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது
தொலைநிலைக் கல்வி: 3 பல்கலைக்கழகங்கள் மட்டுமே நடத்த முடியும்

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) புதிய விதிகளின்படி, தமிழகத்தில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே 2018-ஆம் ஆண்டில் தொலைநிலைக் கல்வியை நடத்த முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
அதாவது, சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே 2018-ஆம் ஆண்டில் தொலைநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும். 
இதனால், தமிழகத்தில் உள்ள பிற பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் தொலைநிலைப் படிப்புகளில் சேரும் மாணவர்களின் பட்டம் செல்லாது என யுஜிசியால் அறிவிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
தொலைநிலை படிப்புகளைக் கட்டுப்படுத்தி வரும் யுஜிசி, உயர் கல்வித் தரத்தை மேம்படுத்தும்வகையில் அண்மையில் புதிய வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டது. அதில், தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சிலின் ('நாக்') அங்கீகாரம் பெற்று குறைந்தபட்சம் 3.26 புள்ளிகளைப் பெற்றிருக்கும் பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைக் கல்வியை நடத்த முடியும் எனத் தெரிவித்திருந்தது.
'நாக்' அங்கீகாரம்: 'நாக்' கவுன்சில் அதிகபட்சமாக 4 புள்ளிகளைக் கொண்ட அளவீடு மூலம் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை பல்வேறு காரணிகளின் கீழ் ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்கும். 
இதில் 3.51 முதல் 4 புள்ளிகள் பெறும் கல்வி நிறுவனத்துக்கு ஏ (பிளஸ், பிளஸ்) கிரேடு, 3.26 முதல் 3.50 புள்ளிகள் பெறும் நிறுவனங்களுக்கு ஏ (பிளஸ்) கிரேடு, 3.01 முதல் 3.25 வரை பெறும் கல்வி நிறுவனத்துக்கு ஏ கிரேடு வழங்கும். 
மேலும் 2.76 முதல் 3 புள்ளிகள் வரை வாங்கும் கல்வி நிறுவனத்துக்கு பி (பிளஸ், பிளஸ்) கிரேடு, 2.51 முதல் 2.75 வரை பெறும் கல்வி நிறுவனத்துக்கு பி (பிளஸ்) கிரேடு, 2.01 முதல் 2.50 புள்ளிகள் வரை பெறும் நிறுவனங்களுக்கு பி கிரேடும், 1.51 முதல் 2 புள்ளிகள் வரை பெறும் கல்வி நிறுவனத்துக்கு சி கிரேடும் வழங்கும். இதில் 1.50 புள்ளிகளும் அதற்குக் கீழ் பெறும் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படாது.
இந்த நிலையில், யுஜிசி-யின் புதிய வழிகாட்டுதலின் படி பார்க்கும்போது தமிழகத்தில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே 3.26-க்கும் மேற்பட்ட நாக் புள்ளிகளைப் பெற்றுள்ளன. 
காரைக்குடிஅழகப்பா பல்கலைக்கழகம் 3.64 புள்ளிகளும், அண்ணா பல்கலைக்கழகம் 3.46 புள்ளிகளும், சென்னைப் பல்கலைக்கழகம் 3.32 புள்ளிகளும் பெற்றுள்ளன. மற்ற பல்கலைக்கழகங்கள் அனைத்தும் 3.26 புள்ளிகளுக்குக் குறைவான புள்ளிகளையே பெற்றுள்ளன.
'நாக்' புள்ளிகள் காரணமாக...கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 3.11 'நாக்' புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 3.09 புள்ளிகளையும், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் 3.15 புள்ளிகளையும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 3.08 புள்ளிகளையும் பெற்றுள்ளன. 
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் குறைவான புள்ளிகளைப் பெற்றுள்ளன. இவற்றில் திருநெல்வேலி மனோண்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஆகியவை மிகக் குறைவாக பி கிரேடு புள்ளிகளையே பெற்றுள்ளன. இந்த பல்கலைக்கழகங்கள் அனைத்தும் 2018-ஆம் ஆண்டில் தொலைநிலைக் கல்வியில் மாணவர் சேர்க்கையை நடத்த இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து உயர் கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் கூறியது: யுஜிசி-யின் இந்தக் கட்டுப்பாடு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும். யுஜிசி-யின் இந்த புதிய வழிகாட்டுதலால் இந்தியா முழுவதும் 40 கல்வி நிறுவனங்கள் மட்டுமே தொலைநிலைக் கல்வி நடத்தக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
கோரிக்கை: எனவே, தொலைநிலைப் படிப்புகளை வழங்க இப்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள 3.26 நாக் புள்ளிகள் என்பதை, 3 புள்ளிகளாகக் குறைக்க வேண்டும் என யுஜிசியிடம் தமிழக உயர் கல்வித் துறை சார்பிலும், பல்கலைக்கழகங்கள் சார்பிலும் தனித்தனியாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை யுஜிசி ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com