பிறந்த குழந்தைகளின் செவித்திறனை கண்டறிய 162 மையங்களுக்கு கருவி: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

பிறந்த குழந்தைகளின் செவித்திறனைக் கண்டறியும் வகையில் தமிழகம் முழுவதும் 162 பச்சிளங் குழந்தை சிகிச்சை மையங்களில் ஒலியியல் கருவி நிறுவப்பட உள்ளது என்று தமிழக சுகாதாரத்
பிறந்த குழந்தைகளின் செவித்திறனை கண்டறிய 162 மையங்களுக்கு கருவி: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

பிறந்த குழந்தைகளின் செவித்திறனைக் கண்டறியும் வகையில் தமிழகம் முழுவதும் 162 பச்சிளங் குழந்தை சிகிச்சை மையங்களில் ஒலியியல் கருவி நிறுவப்பட உள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு காக்ளியர் அறுவைச் சிகிச்சை செய்து நோயாளிகளுக்கு பொருத்தப்பட்ட காது கேட்கும் கருவிகளில் பலவற்றில் பழுது ஏற்பட்டது. பழுதான பாகங்களை மாற்றி புதிய துணை பாகங்களை வழங்கும் நிகழ்ச்சி, தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாக அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 126 பேருக்கு ரூ.62.47 லட்சம் செலவில் பழுதடைந்த பாகங்கள் மாற்றப்பட்டு புதிய பாகங்கள் பொருத்தப்பட்டன. 
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியது: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 2,968 செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள ரூ.241.76 கோடி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 
காக்ளியர் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கருவி பொருத்தப்பட்டோருக்கு, அறுவைச் சிகிச்சைக்குப் பின் செவித்திறன் எவ்வாறு உள்ளது என்பதைக் கண்காணிக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டது.
கருவியின் பாகங்கள் இலவசம்: இந்த ஆய்வில் அறுவைச் சிகிச்சை செய்து காதுகளில் பொருத்தப்பட்ட கருவிகளின் பாகங்கள், பேட்டரி, கேபிள், வெளிப்புற பேச்சு செயலி போன்றவை பழுதடைந்துள்ளது தெரிய வந்தது. இதனைப் பழுது நீக்க அதிக செலவாகும் என்பதாலும், அதனைப் பழுது பார்க்கக்கூடிய பொருளாதார சூழல் இல்லாததாலும் பலர் கருவியைப் பயன்படுத்த இயலாமல் இருந்தனர். எனவே, அவர்களுக்கு மீண்டும் செவித்திறனை மீட்டெடுக்கும் வகையில், பழுதடைந்த மற்றும் சேதமடைந்த கருவியின் பாகங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 
ஒலியியல் கருவி: மேலும், பிறந்த குழந்தையின் செவித்திறனை மருத்துவமனையிலேயே கண்டறியவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சோதனை முயற்சியாக 162 ஒருங்கிணைந்த அவசர மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை சிகிச்சை மையங்களில் ('சீமாங்' மையங்கள்) செவித்திறனைக் கண்டறியும் ஒலியியல் கருவி நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் செவித்திறன் குறைபாட்டை தமிழகத்திலிருந்து முற்றிலும் நீக்க முடியும் என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தேசிய நலவாழ்வு குழுமத்தின் இயக்குநர் தாரேஸ் அகமது உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com