விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில்

பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது.
சென்னை அசோக்நகர் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி நர்மதா சார்பில் அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டன.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் முடிந்துவிட்டன.10-ஆம் வகுப்புத் தேர்வுகள் வரும் வெள்ளிக்கிழமை ( ஏப்.20)முடிவடைகிறது. 
பிளஸ் 2 வுக்கு மே 16, பத்தாம் வகுப்புக்கு மே 23, பிளஸ் 1 வகுப்புக்கு மே 30-ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 11-இல் தொடங்கி ஏப். 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 
இந்நேரத்தில் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், விடைத்தாள் 
திருத்தும் பணியைப் புறக்கணிக்கப் போவதாகவும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படும். இத்தாமதத்தால் மாணவர்கள் மேற்படிப்புக்குச் செல்வதில் பாதிப்பு ஏற்படும். 
எனவே, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தடை விதிக்க வேண்டும். குறித்த நேரத்தில் தேர்தல் முடிவுகளை வெளியிட உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். 
இம்மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. 
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்குரைஞர் சி.முனுசாமி, அறிவிக்கப்பட்ட நாளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 
மேலும் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
பதில் அளிக்க நோட்டீஸ்: இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மனு தொடர்பாக தமிழக அரசும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் சங்கமும் பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் ஏப்.24- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com