ஸ்டெர்லைட் ஆலைக்கான உரிமம் புதுப்பிக்க மறுப்பு: சொல்லப்படும் குப்பைக் காரணங்கள்

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஒரு பக்கம் போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், ஆலைக்கான உரிமத்தைப் புதுப்பிக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கான உரிமம் புதுப்பிக்க மறுப்பு: சொல்லப்படும் குப்பைக் காரணங்கள்


சென்னை: தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஒரு பக்கம் போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், ஆலைக்கான உரிமத்தைப் புதுப்பிக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது.

கொடுக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றாத காரணத்தால் உரிமத்தை புதுப்பிக்கவில்லை என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பிலும், விண்ணப்பத்தில் சில தவறுகள் இருந்ததால் விண்ணப்பத்தை நிராகரித்ததாக ஆலை நிர்வாகம் தரப்பிலும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கான உரிமத்தை புதுப்பிக்க மறுத்ததற்கான 5 முக்கியக் காரணங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

அதில் மிக முக்கியமான குற்றச்சாட்டு என்னவென்றால், கடந்த 5 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து பல ஆயிரக்கணக்கான டன் எடை கொண்ட அபாயகரமான குப்பைகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலைக்கு 2008ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி அளிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அனுமதி 2013ம் ஆண்டு ஜூலை 9ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து உற்பத்தியில் ஈடுபட்டு, ஏராளமான அபாயகரமான குப்பைகளை, எந்த அனுமதியும் இல்லாமல் கொட்டியுள்ளது.

ஆலையை தொடர்ந்து இயக்க உரிமத்தைப் புதுப்பிக்கக் கோரிய விண்ணப்பத்தில் கூடுதல் தகவல்கள் கேட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக ஏப்ரல் 9ம் தேதி அறிக்கைக் கூறுகிறது. அந்த விண்ணப்பம் மீண்டும் சமர்ப்பிக்கப்படவில்லை.

இதற்கிடையே 2013ம் ஆண்டுக்குப் பிறகு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் ஸ்டெர்லைட் ஆலைக்கு 3 முறை உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையின் இயக்கத்தால், காற்றில் கலக்கும் உலோகத் தன்மை குறித்து ஆராயவும், ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் குடிநீர் மாசுபாடு குறித்து ஆய்வு செய்யவும் ஆலை நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்யவில்லை என்றும் கூறி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உரிமத்தைப் புதுப்பிக்க மறுத்துள்ளது.

அதே சமயம், அருகில் இருக்கும் பட்டா பெற்ற நிலங்கள் உள்ளிட்ட நிலங்களில், கொட்டியிருக்கும் தாமிரக் கழிவுகளை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் அகற்றத் தவறிவிட்டது. மேலும், தாமிரக் குப்பைகளைக் கொட்டிவைத்திருக்கும் நிலத்தைச் சுற்றி தடுப்புகளை ஏற்படுத்த தவறியதால், அபாயகரமான தாமிரக் கழிவுகள் அருகில் இருக்கும் நதிகளிலும் கலந்துவிட்டது. 

கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடத்திய ஆய்வின் போது இது கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக குப்பைகளை அப்புறப்படுத்த குளம்போன்று தோண்டி அதில் குப்பைகளை அடைக்குமாறு உத்தரவிட்டும், 2018 மார்ச் 31ம் தேதி வரை நிபந்தனை நிறைவேற்றப்படவில்லை.

எனவே இதுபோன்ற காரணங்களால்தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட வேண்டிய உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் இருந்து இதுவரை எந்த விளக்கமும் வரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com