கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்த அனுமதி; தேர்தல் முடிவுகளை வெளியிட தடை: உச்ச நீதிமன்றம்

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்த அனுமதி அளித்திருக்கும் உச்ச நீதிமன்றம், வழக்கு முடியும் வரை தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதித்துள்ளது.
கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்த அனுமதி; தேர்தல் முடிவுகளை வெளியிட தடை: உச்ச நீதிமன்றம்


புது தில்லி: தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்த அனுமதி அளித்திருக்கும் உச்ச நீதிமன்றம், வழக்கு முடியும் வரை தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதித்துள்ளது.

ஆளும் கட்சியினர், எதிர்தரப்பினரை, வேட்பு மனு தாக்கல் செய்யவிடாமல் அராஜகத்தில் ஈடுபட்டதாகக் கூறி தொடரப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழகத்தில் 4 கட்டங்களாக நடக்க இருந்த கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை விதித்தது.

இந்த தடையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்த மதுரைக் கிளை நீதிமன்றம் பிறப்பித்த தடையை ரத்து செய்து, தேர்தலை நடத்த அனுமதி அளித்துள்ளது. மேலும், திட்டமிட்டபடி தேர்தலை நடத்தலாம் என்றும், வழக்கு முடியும் வரை தேர்தல் முடிவை வெளியிடக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்தி விட்டு மே 3ம் தேதி அது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படியும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கூட்டுறவு சங்கத் தேர்தல் தடைக்கு எதிராக தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகியோரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள்  உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது மேற்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதி சட்டப்பேரவை திமுக உறுப்பினரும், கொறாடாவுமான ஆர்.சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, "கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாக வேட்புமனுக்களை வாங்கவோ, பரிசீலிக்கவோ கூடாது. மேலும், அடுத்த கட்ட தேர்தல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ஏப்ரல் 23-ஆம் தேதி வரை நீடிக்கும்' என உத்தரவிட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு கடந்த திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, தமிழக சட்டப்பேரவை திமுக கொறடா ஆர்.சக்கரபாணி சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசின் சார்பாக கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

கூட்டுறவு சங்கத் தேர்தல் தடைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்த போது, மதுரைக் கிளை பிறப்பித்த தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம், தேர்தல் முடிவுகளை வெளியிட தடை பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com