சித்திரை பௌர்ணமி திருவிழா: திருவண்ணாமலையில் கற்பூரம் ஏற்ற, மலையேறத் தடை

திருவண்ணாமலையில் வரும் 29-ஆம் தேதி நடைபெறும் சித்திரை பௌர்ணமி திருவிழாவின்போது கற்பூரம் ஏற்றவும், மலையேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக
சித்திரை பௌர்ணமி திருவிழா: திருவண்ணாமலையில் கற்பூரம் ஏற்ற, மலையேறத் தடை

திருவண்ணாமலையில் வரும் 29-ஆம் தேதி நடைபெறும் சித்திரை பௌர்ணமி திருவிழாவின்போது கற்பூரம் ஏற்றவும், மலையேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் சித்திரை பெளர்ணமி திருவிழாவையொட்டி செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி, மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் க.லோகநாயகி, கோயில் இணை ஆணையர் ஞானசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், சித்திரை பெளர்ணமி திருவிழாவுக்காக கோயில் நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், மின்வாரியம் உள்பட பல்வேறு துறைகள் சார்பில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார். இதையடுத்து, செய்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அளித்த பேட்டி:

சித்திரை பெளர்ணமி திருவிழாவுக்கு பல பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. கோயில், கிரிவலப் பாதையில் 12 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன.

கோயிலுக்குள் முதியோர்களை அழைத்துச் செல்ல 3 பேட்டரி கார்களும், மாற்றுத் திறனாளிகளை அழைத்துச் செல்ல சக்கர நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. பொது தரிசனப் பாதையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாதுகாப்புப் பணியில் 2,500 காவலர்கள் ஈடுபடுகின்றனர்.

பக்தர்களின் பொருள்களை இலவசமாக வைத்துவிட்டுச் செல்ல 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அரசுப் போக்குவத்துக் கழகம் சார்பில், 2,800 சிறப்புப் பேருந்துகள் 7,800 நடைகள் இயக்கப்படும். கிரிவலம் வரும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றவும், மலை ஏறவும் தடை செய்யப்படுகிறது.

வனத் துறை மூலம் மலையில் உள்ள விலங்குகளுக்கு அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தேவையான தண்ணீர் நிரப்பப்படும். தமிழகத்தின் பல்வேறு மார்கங்களில் இருந்து 14 ரயில்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன. வேளாண் துறை மூலம் திருவண்ணாமலைக்கு வரும் 9 அணுகு சாலைகளில் விவசாய நிலங்களில் பம்பு செட்டுகள் உள்ள 42 இடங்களில் இலவசமாக குளிக்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்.

கிரிவலப் பாதையில் உள்ள கழிப்பறைகளை பக்தர்கள் இலவசமாகப் பயன்படுத்தலாம். மீறி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அன்னதானம் வழங்க 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கலாம். தாற்காலிகப் பேருந்து நிலையங்களில் அன்னதானம் வழங்க விரும்புவோருக்கு போதிய இடம் அளிக்கப்படும் என்றார்.

கூட்டத்தில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சு.ஜானகி, கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, நகராட்சி ஆணையர் செ.பாரிஜாதம், உதவி காவல் கண்காணிப்பாளர் ரவாளிப் பிரியா, மகளிர் திட்ட அலுவலர் ஜெயசுதா உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கிரிவலம் வர உகந்த நேரம்
திருவண்ணாமலையில் வரும் 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு பெளர்ணமி தொடங்கி, 30-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 6.54 மணிக்கு முடிவடைகிறது. சித்திரை பெளர்ணமியையொட்டி இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com