பாலியல் பேர விவகாரம்: மதுரையில் ஒரு நபர் ஆணைய விசாரணை தொடக்கம்

கல்லூரி மாணவிகளிடம் பேராசிரியை பாலியல் பேரம் பேசிய விவகாரம் தொடர்பாக மதுரையில் வியாழக்கிழமை ஒரு நபர் ஆணையம் விசாரணையைத் தொடங்கியது.
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி மீதான புகார் குறித்து மதுரை சுற்றாலா மாளிகையில் வியாழக்கிழமை மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணை வேந்தர் பி.பி. செல்லதுரை
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி மீதான புகார் குறித்து மதுரை சுற்றாலா மாளிகையில் வியாழக்கிழமை மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணை வேந்தர் பி.பி. செல்லதுரை

கல்லூரி மாணவிகளிடம் பேராசிரியை பாலியல் பேரம் பேசிய விவகாரம் தொடர்பாக மதுரையில் வியாழக்கிழமை ஒரு நபர் ஆணையம் விசாரணையைத் தொடங்கியது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவியரைத் தவறாக வழிநடத்த முயன்ற புகாரில் அக் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். செல்லிடப்பேசியில் மாணவியரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை போலீஸார் விசாரித்த இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார். 
இந்நிலையில், ஆணையத்தின் தலைவர் ஆர்.சந்தானம், மதுரை அரசினர் விருந்தினர் மாளிகையில் வியாழக்கிழமை தனது விசாரணையைத் தொடங்கினார். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது: குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். 
அவரிடம் விசாரணை நடத்த அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அருப்புக்கோட்டை கல்லூரியில் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்த உள்ளேன். முதல்சுற்று விசாரணை 3 நாள்கள் நடைபெறும். அதன் பிறகு அடுத்த வாரத்தில் 3 அல்லது 4 நாள்கள் மீண்டும் விசாரணை நடத்தப்படும். காவல் துறையினரின் விசாரணை குற்றத்தை மையமாகக் கொண்டது. விசாரணை ஆணையமானது, ஒழுக்கக் கேடான உரையாடலின் பின்னணி, அதில் உள்ள தொடர்புகள், பல்கலைக்கழகத்துக்கு உள்ள தொடர்பு ஆகியனவற்றை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.
அதைத் தொடர்ந்து துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை, பதிவாளர் வி.சின்னையா ஆகியோரிடம் விசாரணை நடைமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பேராசிரியை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தினார். சுமார் 3 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் மரியாதை நிமித்தமாக, விசாரணை ஆணையரைச் சந்தித்துப் பேசினார். விசாரணை ஆணையத்துக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
ஏப். 21, 25, 26-இல் நேரில் புகார்களை தெரிவிக்கலாம்
அருப்புக்கோட்டை கல்லூரி உதவிப் பேராசிரியையின் ஒழுக்கக் கேடான உரையாடல் தொடர்பான ஆதாரங்களை நேரில் சமர்ப்பிக்கலாம் என்று விசாரணை ஆணையத் தலைவர் ஆர்.சந்தானம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆணையத்தின் விசாரணை மதுரை அரசின் விருந்தினர் மாளிகையில் ஏப்ரல் 21, 25, 26 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாகப் புகார்களைத் தெரிவிக்க விரும்புவோர் மேற்குறிப்பிட்ட நாள்களில் விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்கலாம். மேலும் இதுதொடர்பான ஆதாரங்கள் இருப்பினும் அவற்றையும் சமர்ப்பிக்கலாம் என்றார்.
விசாரணைக் குழுவில் 2 பேராசிரியைகள் நியமனம்
ஆணையத் தலைவர் சந்தானம் மேலும் கூறியது: 
விசாரணைக் குழுவில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பிரிவு முதன்மையர் டி.கமலி, மதுரை வேளாண்மைக் கல்லூரி மண்ணியல் மற்றும் சுற்றுச்சூழலியல் துறை பேராசிரியை எஸ்.தியாகேஸ்வரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். காமராஜர் பல்கலைக்கழகம் சம்பந்தப்படாதவர்களை நியமிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவியர், பேராசிரியைகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தும் போது உதவியாக செயல்படுவர். மதுரை சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவியிடமும் விசாரணை நடத்தப்படும் போதும் இப்பேராசிரியைகள் உடனிருப்பார்கள். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரும் 21 (சனிக்கிழமை) மற்றும் 25 ஆம் தேதி (புதன்கிழமை) ஆகிய இரு நாள்கள் அங்கு தங்கி விசாரணை நடத்தவுள்ளேன். அப்போது பல்கலைக்கழக ஆசிரியர்கள், அலுவலர்கள் சங்கப் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளேன். சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரிப்போம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com