சேப்பாக்கத்திற்கு பதிலாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கி பேரணி: காவிரி விவகாரம் பற்றி கமல்! 

காவிரி பிரச்சினைக்காக போராடியவர்கள் ஐபிஎல் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்திற்குப் பதில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கி பேரணியாக சென்றிருக்க வேண்டும்.. 
சேப்பாக்கத்திற்கு பதிலாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கி பேரணி: காவிரி விவகாரம் பற்றி கமல்! 

சென்னை: காவிரி பிரச்சினைக்காக போராடியவர்கள் ஐபிஎல் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்திற்குப் பதில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கி பேரணியாக சென்றிருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை சர்வதேச மையம் (சிஐசி) என்னும் அமைப்பின் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று சனிக்கிழமையன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், ‘இந்து’ என்.ராம், ‘இந்து’ என்.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்பொழுது கமல்ஹாசன் பேசியதாவது:

தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் கடன் இருக்கிறது. நம் ஒவ்வொருவர் தலையிலும் ரூ.45 ஆயிரம் கடன் சுமை உள்ளது.

டாஸ்மாக் மூலம் அரசுக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு வருமானம் வருகிறது. டாஸ்மாக் ஒரு வியாபாரம். அதைச் செய்யலாம். ஆனால், அதை 2 பேர் மட்டுமே செய்வதைத்தான் தவறு என்கிறேன். டாஸ்மாக்குக்கு நிகராக அரசு பல வழிகளில் வருவாயை ஈட்ட முடியும்.

பல கோடி ரூபாய் செலவழித்து புதிதாக கட்டப்பட்ட தலைமைச் செயலகம், பன்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவதற்காக கட்டப்படவில்லை. அது மருத்துவமனையாக மாற்றுவதற்கு உரிய இடமும் அல்ல. ஆனால் இதுபோன்ற தவறுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

காவிரி பிரச்சினைக்காக போராடியவர்கள் ஐபிஎல் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்திற்குப் பதில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கி பேரணியாக சென்றிருக்க வேண்டும். அப்படியிருந்தால் நான் முதல் ஆளாக நின்றிருப்பேன். புனித ஜார்ஜ் கோட்டையை சுத்தம் செய்ய வேண்டும். அதை நோக்கித்தான் பயணித்து வருகிறேன்.

தேர்தலின்போது ஒருபோதும் நான் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்பதை உறுதிபடத்  தெரிவித்துக்கொள்கிறேன்.

ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். தொழிற்சாலைக்கு நான் எதிரானவன் அல்ல. தொழிற்சாலைகள் இல்லாமல் மாநிலத்தின் வளர்ச்சி இல்லை. ஆனால், அரசு - தொழில் நிறுவனங்கள் இடையேயான நடவடிக்கையானது ஒரு ரகசிய உடன்படிக்கை போன்று தொழிற்சாலைகள் செயல்படக்கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com