திமுக ஆட்சிக்கு வந்தால் லோக் ஆயுக்த சட்டம்

திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் பணியாக லோக் ஆயுக்த சட்டம் நிறைவேற்றப்படும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் லோக் ஆயுக்த சட்டம்

திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் பணியாக லோக் ஆயுக்த சட்டம் நிறைவேற்றப்படும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
 சென்னை பெரம்பூரில் திமுக கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற மு.க.ஸ்டாலின் பேசியதாவது: காவிரி உரிமைக்காக கடந்த 30 ஆண்டுகளாக நாம் தொடர்ந்து போராடி வரும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றி இருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு அது பற்றி கவலைப்படவில்லை.
 ஜல்லிக் கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தபோது மக்கள் கிளர்ந்தெழுந்தனர். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு மீறவில்லை. ஜல்லிக்கட்டு நடத்துவதை தட்டிக் கழித்தது.
 அதே போன்று, கிராமப்புற ஏழை மக்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பை பறிக்கும் வகையில் நீட் தேர்வை கொண்டு வர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அதை எதிர்த்து தமிழகமே கிளர்ந்தெழுந்தது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவை மீற முடியாது என மத்திய அரசு கூறியது.
 காவிரி பிரச்னையில்...: ஆ னால், ஆறுவார காலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று அதே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அதை நிறைவேற்ற மத்திய அரசு முன் வரவில்லை. இதிலிருந்து, தமிழகத்தைப் பற்றி, தமிழக மக்களை, விவசாயிகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாத ஆட்சி மத்தியில் நடக்கிறது. அதற்கு துதிபாடும் ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த நிலை மாற வேண்டும் என்ற முயற்சியில் அனைவரும் ஈடுபட்டிருக்கிறோம்.
 லோக் ஆயுக்த அமைக்கப்படும்: தமிழகத்தில் லோக் அயுக்த அமைப்பை உருவாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இரு தினங்களுக்கு முன் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் பலமுறை வலியுறுத்தியும் அரசிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. விரைவில் தமிழகத்தில் திமுக ஆட்சி உருவாகும். திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் பணியாக லோக் ஆயுக்த சட்டம் நிறைவேற்றப்படும் என்றார் ஸ்டாலின்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com