பொறியியல் கலந்தாய்வுக்கு எப்போது, எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் மே 3ம் தேதி முதல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
பொறியியல் கலந்தாய்வுக்கு எப்போது, எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!


சென்னை: பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் மே 3ம் தேதி முதல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் பொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்களை செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, பொறியியல் கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் முறையாக ஆன்லைனில் நடைபெற உள்ளது. அதே போல, விண்ணப்பப் பதிவும் ஆன்லைனிலேயே நடைபெறும். இருந்த இடத்தில் இருந்து கொண்டே மாணவர்கள், ஆன்லைன் மூலமாக மே 3 முதல் 30ம் தேதி வரை பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

கிராமத்தில் இருக்கும் மாணவர்கள், ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வசதியாக தமிழகத்தில் 42 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 42 கல்லூரிகளில் அமைக்கப்படும் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மையங்களில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடங்கள் உருவாக்கப்பட்டு மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தை சரியாக பதிவு செய்ய உதவி செய்யப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்யும் போது அனைத்து மாணவர்களுக்கும் வழிகாட்டி புத்தகம் வழங்கப்படும்.

இந்த மையங்களில் ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்ய கூடுதல் கட்டணம் கிடையாது. ஆனால், விண்ணப்பக் கட்டணம் உண்டு. இந்த மையங்களுக்கு வந்துதான் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வசதி இருப்பின் அவரவர் இடங்களிலேயே விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

ஆனால், சான்றிதழை சரிபார்க்க ஜூன் முதல் வாரத்தில் இந்த மையங்களுக்குத்தான் அனைத்து மாணவர்களும் செல்ல வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்த மாணவர்களுக்கு, சான்றிதழ் சரிபாப்பு பணி ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக ஓரிரு நாட்கள் தாமதமானாலும் அதற்கேற்பு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும்.

பொறியியல் கலந்தாய்வில் கடந்த ஆண்டு அரசு கல்லூரிகளுடன் மொத்தம் 586 பொறியியல் கல்லூரிகள் பங்கேற்றன. இந்த ஆண்டு 19 கல்லூரிகள் நீங்கலாக 567 கல்லூரிகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மே 15ம் தேதி பொறியியல் கலந்தாய்வில் எத்தனை கல்லூரிகள் பங்கேற்கின்றன என்ற சரியான தகவலும், எத்தனை மாணவர் சேர்க்கை இடங்கள் நிரப்பப்பட உள்ளது என்ற தகவலும் வெளியிடப்படும்.

அதன் பிறகு, ஜூலை முதல் வாரத்தில் கல்லூரியை தேர்வு செய்து பதிவு செய்தால் போதும். கல்லூரியை தேர்வு செய்து பதிவு செய்த பிறகுக் கூட தங்களது தெரிவுகளை மாற்றிக் கொள்ளவும் மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் போது எவ்வாறு ஆன்லைன் மூலம் கலந்தாய்வில் பங்கேற்பது குறித்த குறும்படம் காட்டப்படும். அதைப் பார்த்தும் மாணவர்கள் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் சான்றிதழ் சரிபாக்க 6 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அந்த 6 நாட்களில் சான்றிதழை சரி பார்க்க முடியவில்லை என்றாலும், 7வது நாளாக அவகாசம் அளிக்கப்படும். ஆனால், அந்த 7வது நாளில், சம்பந்தப்பட்ட மாணவர்கள் சென்னையில் தான் வந்து சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியும். அதே சமயம், சம்பந்தப்பட்ட மாணவர் வரமுடியாத நிலையில் இருந்தால், அவர் வரவில்லை என்றாலும், பெற்றோர் அல்லது உடன் பிறந்தவர்கள் சான்றிதழைக் கொண்டு வரவும் வாய்ப்பு அளிக்கப்படும்.

மேலும் மாணவர்களுக்கு கூடுதல் வசதியாக, ஆன்லைன் விண்ணப்பத்தில் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்ய அளவற்ற வாய்ப்புகள் வழங்கப்படும். அதாவது கல்லூரியை தேர்வு செய்யும் இடத்தில் ஒரே ஒரு கல்லூரியை மட்டும் அல்லாமல், ஒரு மாணவர் உதாரணமாக 25 கல்லூரியைக் கூட தேர்வு செய்யலாம்.  இதில் எந்த உச்ச வரம்பும் இல்லை. இதே போல, கல்லூரி, பாடப்பிரிவு, விருப்ப வரிசை என எத்தனை இடங்களையும் அவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com